பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இரா.சாணக்கியனுக்கும் இடையில் விஷேட சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மாவட்ட மற்றும் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நேரடியாக முகம் கொடுக்கும் பிரச்சினைகளான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை.

கனிய வளங்களான இல்மனைட் அகழ்வு இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத காணி அபகரிப்பு சட்ட விரோதமான மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சார்ந்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விவசாய ஆரம்பக் கொடுப்பனவானது பொலன்னறுவை எனும் இடத்தினை சார்ந்தே இங்கு கொடுக்கப்படுகின்றது ஆனால் இங்கு பயிரிடப்படும் போகங்கள் வித்தியாசமானதாகும்.

பல நேரங்களில் போகம் முடியும் தருவாயில் பணம் கொடுக்கின்றார்கள். உரத்துக்கான கொடுப்பனவும் இவ்வாறே நிகழ்கின்றது. எமது மூலோபாய வாழ்வாதாரமான விவசாயம் மீன்பிடி கால்நடை இவை மூன்றுமே இங்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.

இதனால் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப் பின்னடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் எடுத்துக்கொண்டால் எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லாமையே இவ்வாறான சிக்கல்களையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்குமிடத்து வட கிழக்கை செழிப்புறும் பிரதேசமாக மாற்ற எம்மால் முடியும்.

மற்றும் எம்மால் எம் மக்களுக்கு தேவையான முடிவுகளை மேற்கொள்ள முடியும். வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்க சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மற்றும் TRC – Truth, Unity and Reconciliation Commission உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக நிலை கால சட்டம் சம்பந்தமான விடயங்களிலும் அரசாங்கம் எம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு வருகின்றது என்பதனையும் வலியுறுத்திக் கூறினேன். எனவும் மற்றும் சமகால அரசியல் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டது.” எனவும் தெரிவித்துள்ளார்.