நீதியமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

“சுதந்திர கட்சியை சீரழித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தனது நற்பெயரை இல்லாதொழித்துக் கொள்ள கூடாது என்பதை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும்  “பல அரசியல் கட்சிகளில் உறுப்பினராக பதவி வகித்த விஜயதாஸ ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக சுதந்திரக் கட்சியை சீரழித்த மைத்திரிபால போட்டியிடும் நோக்கத்தில் சுதந்திர கட்சிக்கு வருகை தந்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் பதில் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமை சுதந்திர கட்சியின் யாப்புக்கு முற்றிலும் விரோதமானது.

மைத்திரிபால சிறிசேன வீதியில் செல்பவர்களை அழைத்து வந்து அவர்களை நிறைவேற்று சபையில் அமர செய்து தவறான தீர்மானங்களை எடுத்துள்ளார்.

நாட்டின் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்சவுக்கு அரசியல் கட்சிகளின் யாப்பு மற்றும் பொது சட்டம் பற்றி கூற வேண்டிய தேவை இல்லை.

சுதந்திர கட்சியை சீரழித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தனது நற்பெயரை இல்லாதொழித்துக் கொள்ள கூடாது என்பதை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.