தம்பலகாமம் படுகொலை தொடர்பில் 5 பொலிசாருக்கு ஆயுள்தண்டனை

தம்பலகாமம் பகுதியில் 01.02.1998ஆம் ஆண்டு 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றில் நடைபெற்று பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்றுவந்த இந்நிலையிலேயே குறித்த தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

குறித்த படுகொலையுடன் தொடர்புபட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரத்திலிருந்து பன்னிரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தம்பலகாமம் பிரதேசத்தில் பாரதிபுரம் கிராமம் அமைந்துள்ளது.
01.02.1998 அன்று காலை 5.00க்கும் 6.00 இடைப்பட்ட நேரத்தில் பாரதிபுரம் இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் அப்பகுதியாற் சென்ற பொதுமக்களில் 8 பேரைக் கைது செய்து முகாமை சுற்றி நிறுத்திவைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த 8 பேரில் 4 பேர் மாணவர்களாவர். உயிரிழந்த ஆறுமுகன் சேகர் என்பவரின் ஆணுறுப்பை வெட்டி அவரது வாய்க்குள் திணித்திருந்ததும் முக்கிய சம்பவமாக பதிவாகியிருந்தது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்
01. ஆறுமுகம் சேகர்
02. அமிர்தலிங்கம் சுரேந்திரன்
03. அமிர்தலிங்கம் கஜேந்திரன்
04. பொன்னம்பலம் கனகசபை
05. முருகேசு ஜனகன்
06. நாதன் பவளநாதன்
07. சுப்பிரமணியம் திவாகரன்
08. குணரத்தினம் சிவராஜன்

சம்பவம் தொடர்பாக ஒருவர் குறிப்பிடுகையில்…
தம்பலகாமத்தின் புதுமனை புகுதல் வீட்டில் அதாவது அக்காலத்தில் யாராவது வீட்டில் எதாவது நிகழ்வுகள் இருப்பின் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக மகிழ்வினை கொண்டாடும் முகமாக வீட்டு முற்றத்தில் இருந்து திரைப்படங்கள் பார்ப்பது வழக்கமான தொன்றாகும் அந்த வகையிலே எமது கிராமத்தின் உடைவுமுறிவு வைத்தியரான பேச்சி முத்து ஐயாவின் மகளின் வீட்டிலேயே அனைவரும் ஒன்று சேர்ந்து திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த வேளையிலேயே அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட உறவுகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து திரைப்படத்தினை பார்த்து கொண்டிருந்தோம். அப்போது எனக்கு வயது ஒன்பது. தரம் 5 புலமைப் பரீட்சைக்கு தயார் படுத்துவதற்காக நானும் வழமையாக அங்கே இரவு நேரத்தில் தங்கியிருந்து படிப்பது வழமையானதொன்று.

திடீரென இரவு வேளையில் துப்பாக்கி சத்தங்கள் ஓயாத வண்ணம் தம்பலகாமம் கிராமம் முழுவதும் துப்பாக்கி சத்தத்துடன் மூழ்கியது அந்த 01.02.1998 வது நாள்.

துப்பாக்கி சத்தத்தின் பயந்த நிலையில் எனது வயது போன்ற சிறுவர்கள் மாமா என்று அழைக்கும் வயது வந்த அனைவரும் குறித்த வீட்டிற்குள் உள்ளே பயந்த நிலையில் ஏதும் நடந்து விடுமோ எனும் அச்ச உணர்வுடன் இருந்ததனை இன்றும் மறக்க முடியவில்லை.

இச் சமயத்தில் தியாகரன் அண்ணாவின் மடியினிலே நான் அமர்ந்து இருந்தேன் வீட்டு ஜன்னல் வழியாக துப்பாக்கியினை நீட்டிய ஆயுதம் தாங்கிய மது போதையில் வந்த படையினரால் “வெளியே வா இல்லாவிட்டால் பிள்ளையுடன் உன்னை சுடுவேன்” என்று கூறியது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

என்னை கீழே இறக்கிவிட்டு சென்றவர் தான் கண்ணா என்று அழைக்கப்படும் தியாகரன் அண்ணா.
இச்சந்தர்ப்பத்தில் எனது தந்தையினையும் ஆயுதம் தாங்கியபடையினரால் பிடிக்கபட்டபோது அம்மா எங்களிடம் அப்பாவினை இறுக்க பிடித்து விடாமல் அழுமாறு கூறியதால் நான் மற்றும் எனது அக்கா தங்கை அனைவரும் ஒன்றாக அப்பாவினை இறுகப்பிடித்த அப்பாவினை நாம் விடமாட்டோம் என்று கூறி அழுதபோது அவர்கள் அப்பாவினை பொருட்படுத்தாது தங்களது வெறியினை தீர்க்க 8பேரும் கானும் எனும் நிலையில் பிடித்த அனைவரையும் விசாரணை எனும் பெயரில் அழைத்து சென்று சிறு மணி நேரத்திலே அநியாயமான முறையில் சித்திரவதை செய்து உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொலை செய்தார்கள் பின்னர் பொலித்தீன் பைகளில் கட்டி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்று கையொப்பங்களை இடவைத்த பின்னரே பிரேதங்களை கையளித்தார்கள் .

அப்பாவி பொதுமக்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் பாடசாலை மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை அவர்களது இன வெறித்தாகத்திற்கு.

நடாத்தப்பட்ட கொலையினை நீதி தருவதாக கூறி அநுராதபுர மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது சாட்சியங்களை திட்டமிட்டு பயமுறுதித்தியமையினால் சாட்சியங்கள் இல்லாது வழக்கு முடிவுறுத்தப்பட்டது.