இடைநிறுத்தப்பட்ட கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் – இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சந்தோஷ் ஜா இன்று காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  சந்தோஷ் ஜா தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் ஏந்திரி என்.சிவலிங்கம்,மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்ததுடன் எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய ரயில் சேவையினை விஸ்தரிப்பதற்கு எதிர்காலத்தில் இந்தியா நடவடிக்கையெடுக்கும் என்று உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் தெரிவித்திருந்தார்.