பெண்ணால் தாக்குதலுக்குள்ளான கிராம உத்தியோகத்தர்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய அரிசி தமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்து பெண் ஒருவர் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனாபிட்டிய தெற்கு பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் இலவச அரிசி இதுவரை தமக்கு கிடைக்காமை குறித்து சந்தேகநபரான பெண் கிராம உத்தியோகத்தரிடம் வினவியுள்ளார்.இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது குறித்த பெண் கிராம உத்தியோகத்தரை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் களுத்துறை – வடக்கு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இலவச அரிசி விநியோகத்தின் போது பயனாளிகளிடம் இருந்து பணம் அறவிடப்பட்ட சம்பவமொன்று கட்டான பகுதியில் பதிவாகியுள்ளது.அரிசி விநியோகத்தின்போது போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு எனக் கூறி பயனாளிகளிடம் தலா 50 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பதிலளித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு அரிசியை கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.