யாழ் பல்கலைக்கழக புவியியல்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் S.T.B. இராஜேஸ்வரன் மறைவு பேரிழப்பாகும் – நாகமுத்து பிரதீபராஜா

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் அடையாளங்களில் ஒன்றான பேராசிரியரின் மறைவு இலங்கையின் தமிழ் மொழி மூலமான புவியியல் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். என செய்தியை காலநிலை அவதானிப்பாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

புவியியலில் மிகவும் கடினமான பகுதி என பலராலும் குறிப்பிடப்படும் செய்முறைப் புவியியலிலும், படவரை கலையியலிலும் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர். தான் பாண்டித்தியம் பெற்றது மட்டுமல்ல, படவரைகலையை மிகவும் எளிமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், சிறந்த மொழிநடையில், நகைச்சுவை கலந்து கற்பிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இலங்கையின் எந்த பல்கலைக்கழகத்திலும் அவரைப் போல படவரைகலையை எளிமையாக அதேவேளை சிறப்பாகவும் கற்பிப்பவர் அவருக்கு முன்னும் பின்னும் எவருமில்லை.

1977ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது புவியியல் சிறப்புக் கலைமாணி பட்டத்தைப் பெற்ற பேராசிரியர் 1977, முதல் 1978 வரை பேராதனைப் பல்கலைக்கழக புவியியற்றுறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார்.

பின்னர் 1979 ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் மறைந்த பேராசிரியர் வில்லியம் லூதர் ஜெயசிங்கம் துறைத்தலைவராக இருந்த போது இணைந்து கொண்டார்.

புவிவெளியுருவவியலிலும், படவரைகலையிலும், நிலப்பயன்பாட்டு திட்டமிடலிலும் தன்னுடைய சிறப்புத்துவத்தையும் கொண்டிருந்த பேராசிரியர் இராஜேஸ்வரன் இத்துறைகளில் பல ஆய்வு வெளியீடுகளை மேற்கொண்டிருந்தார்.

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் இராஜேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது புவியியல் சிறப்புக் கலைமாணி பட்டத்தினைப் பூர்த்தி செய்து, பின்னர் நெதர்லாந்து நாட்டில் உள்ள விமான அளவீடு மற்றும் புவி விஞ்ஞானங்களுக்கான சர்வதேச நிறுவனத்தில் ( International Institute for Ariel Survey and Earth Science- ITC) ல் தன்னுடைய பட்டப்பின் டிப்ளோமாவையும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணியையும், கலாநிதி பட்டத்தினையும் நிறைவு செய்தார்.

2011ம் ஆண்டு முதல் 2013 ம் ஆண்டுவரை புவியியல் துறையின் தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் இராஜேஸ்வரன் சிரேஸ்ட மாணவ ஆலோசகராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய இணைப்பாளராகவும் கடமை புரிந்தார்.

பேராசிரியர் இராஜேஸ்வரன் செய்முறைப் புவியியல், விமான ஒளிப்படங்கள், யாழ்ப்பாண குடாநாட்டினதும் அதன் அயலில் அமைந்துள்ள தீவுகளினதும் தோற்றம், Geography of Northern Province ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மிகச் சிறந்த கற்பித்தல் ஆற்றல் மிக்க பேராசிரியர் எந்த விடயத்தையும் மிக எளிமையாக, மிகச் சாதாரண மொழிநடையில், நடைமுறை சார்ந்த உதாரணங்களுடன் விளக்கமளிப்பதில் அவர் நிபுணர். தனித்து பாடத்திட்டங்களோடு மட்டுமன்றி அன்றாட வாழ்க்கை தொடர்பான விடயங்களையும் அவர் தெளிவு படுத்துவார்.

சிறந்த நேர முகாமைத்துவம், நிகழ்வு முகாமைத்துவம், ஒழுங்கமைப்பு போன்றவற்றில் தனித்துவத்தை அவர் கடைப்பிடித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையில் தனித்துவமான ஒழுக்க நெறிகளை மாணவர் மத்தியில் உருவாக்கியதில் பேராசிரியருக்கு பெரும் பங்குண்டு. மாணவர்களின் ஆடை, சிகையலங்காரம், விரிவுரை மண்டபத்தில் நடந்து கொள்ளும் முறை, பொது நிகழ்ச்சிகளில் மாணவர்களின் நடத்தை போன்றவற்றில் பல்வேறு ஒழுங்குகளை அவர் உருவாக்கினார்.

மிக நேர்த்தியாக, முறையான உடையணியும் பழக்கத்தினை மிக நீண்ட காலமாக அவர் பேணினார். எந்த இடத்திற்கு சென்றாலும் அவர் நேர்த்தியான ஆடை அணிவதில் அவர் வல்லவர்.

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நான் புவியியல் துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்ற காலத்தில் இருந்து அவருடன் நெருக்கமான உறவைப் பேணியிருந்தேன். அவருடைய இறுதிக் காலம் வரை அவருடன் நல்லுறவில் இருந்தேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.
2006ம் ஆண்டு A-9 பாதை மூடிய காலத்தில் இருந்து இறுதி யுத்த காலம் வரை பல நாட்கள் திடீர் திடீரென ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். அப்போதெல்லாம் அவருடைய வீடு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் இருந்ததால் என்னை தன் வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பளித்தார். அப்போதெல்லாம் தன் கையாலே சமைத்து உணவளித்தார். மிகவும் கடினமாக உழைத்து தான் அடைந்த உயர்வினை எடுத்துக் கூறுவர். கடின உழைப்புக்கு நிகர் எதுவுமில்லை என அடிக்கடியுரைப்பார்.

சமரசமில்லாத சுத்தத்தை எப்போதும் கடைப்பிடித்தார். அவரின் பணியறையும், வசிப்பிடமும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்.

கம்பீரமான தோற்றமும், தனித்துவமான உருவமும் கொண்ட பேராசிரியர் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் அடையாளம். புவியியல் துறையின் பல சிறப்புக்களை உருவாக்கியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.

எங்கள் பேராசிரியரே… முறைப்படுத்தப்பட்ட (Systematic) வாழ்க்கை முறையை நீங்கள் வாழ்ந்தீர்கள்… உங்களிடம் கற்பதற்கும், பெறுவதற்கும் நிறைய விடயங்கள் உண்டு.

எங்கள் பேராசிரியரே… சென்று வாருங்கள்… நீங்கள் இறக்கவில்லை… என் போன்ற உங்கள் மாணவர்கள் பலரின் நினைவுகளில் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்… உங்களின் அபரிமிதமான கற்பித்தல் ஆற்றல் உங்கள் பெயர் சொல்லும்… தலைமுறைகள் தாண்டியும் உங்கள் புகழ் வாழும்… யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் விரிவுரை மண்டபங்களில் குறிப்பாக செய்முறை விரிவுரை மண்டபம் இறந்த பின்னர் பலரின் பெறுமானம் உணரப்படும் என்பதன் உண்மையை உங்கள் இறப்பில் அறிந்து கொண்டேன்… ஏனென்றால் உங்களின் அறிவு,ஆற்றல், செயற்பாடு அத்தகையது… உங்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.-  என தனது இரங்கல் செய்தியை காலநிலை அவதானிப்பாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.