சர்வதேச மாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு பாராட்டு பெற்ற இலங்கை

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்து இலங்கை பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சார்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த கலந்து கொண்டிருந்தார்.

எதிர்வரும் 3வருடங்களில் கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 3,000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்னும் 23 சதுர கிலோமீற்றர்கள் மாத்திரமே அகற்றப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்காக ஜெனிவா சர்வதேச மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Hallo Trust, MAG, Sharp மற்றும் DASH ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இலங்கை இராணுவம் இந்த பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் இதற்கு நிதியுதவி அளித்து வருவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.