பிரபல பூட்சிற்றிக்கு தண்டபணம் விதிப்பு 

திருநெல்வேலி பிரபல பூட்சிற்றியில் திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பூட்சிற்றி உரிமையாளருக்கு 150,000/= தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பூட்சிற்றிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பூட்சிற்றி உரிமையாளர் இனங்காணப்பட்டார். இதனையடுத்து பூட்சிற்றி உரிமையாளரிற்கு எதிராக 20 குற்றச்சாட்டுகளுடன் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் 18.03.2024ம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துகொண்ட நிலையில் மேலதிக நீதவான் செ. லெனின்குமார், பூட்சிற்றி உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 150,000/= தண்டம் விதித்ததுடன் உரிமையாளரிற்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கியுள்ளார்.