காதலிக்காக காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு

தனது காதலியைச் சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல்போன குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய சொருகம பிரதேசத்தில் உணவு விற்பனை நிலையத்தை நடத்தி வந்த 31 வயதுடைய சுசித் ஜயவன்ச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாபிட்டிய, இலுக்ஹேன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

தகவல் கிடைக்கப்பெற்ற பகுதிகளுக்கு அமைய  பல பொலிஸ் குழுக்கள்  விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தமையினால் அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த சந்தேக நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரது தாய் மற்றும் தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

வெலிமடை மற்றும் கப்பெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் குற்றச்செயல்களுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, காணாமல் போன இளைஞன் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்த போதும், அது எவ்வாறு இடம்பெற்றது அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மேலதிகமாக, குறித்த இளைஞரை கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று (06) குளியாப்பிட்டிய நீதிமன்றில் ஆஜராகியதாகவும், இதுவரை கொலை செய்த நபர் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் நிஹால் தல்துவ தெரிவித்தார்.