முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி 4 பேர் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, பொது மக்களுக்கு வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சேனையூர் எனும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டுடிருந்தபோது அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக்காண்பித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வை தடுக்க முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற தடை உத்தரவை பொது மக்கள் வாங்க மறுத்த நிலையில், பொலிஸார் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்கள் நினைவுக்கூறப்பட்ட நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் நவரத்னராஜா ஹரிஹரகுமார் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை மாணவி மற்றும் பெண் சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட இரண்டு பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனம் தொடர்பான காணொளிகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினையும் கண்டங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பிலும் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.