சமூக மாற்றமே வீதி விபத்துக்களை தடுக்கும் – உதவிப் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ்

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு தனி மனித மாற்றம் அன்றி சமூக மாற்றமே அவசியம் என வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் தெரிவித்தார்.

யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்ற வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான நடைபவணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்கள் அதிகரித்த போக்கில் காணப்படுகின்ற நிலையில் அவற்றை தடுப்பதற்கு சமூகமட்டமான விழிப்புணர்வு அவசியம்.அதன் அடிப்படையில் வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களும் இணைந்து விபத்துக்கள் தொடர்பான சமூகமட்ட விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பித்துள்ளோம்.

இந்த விழிப்புணர்வு செயற்பாடு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டங்கட்டமாக ஏனைய பாடசாலைகளுக்கும் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் பிரதேசங்களில் குறித்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீதியில் பயணிக்கின்ற வாகனங்களின் தரம் பரிசீலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கனகர வாகனங்களின் பின் பக்கங்களில் பின்னால் வருகின்ற வாகனங்களுக்கு தெரியக்கூடிய வகையில் நிற ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் வீதியோரமாகக் காணப்படுகின்ற நடைபாதைகளை அகற்றுவதற்கான முன்னறிவித்தல்கள் மாநகர சபை மற்றும் பொலிசாருடன் இணைந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.ஆகவே வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் வீதி ஒழுங்குகளை உரிய வகையில் பின்பற்றுவதற்கும் வழங்கப்படுகின்ற உரிய வழிகாட்டல்களை பின்பற்ற சமூக நீதியான விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடைய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.