நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (மே15) காலை முதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

காலை 9.30 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில்
முதன்மை நினைவுச் சுடரினை 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் அடைந்து இன்றும் படுகொலையின் சாட்சியாக இருக்கும் விசுவலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் ஏற்றிவைக்க தொடர்து வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை, தேவசபை பாஸ்ரர் , தென்னிந்திய திருச்சபை போதகர் , இந்துமத குரு ஆகியோருடன் படுகொலையானோரின் உறவுகள் சுடர்களை ஏற்றிவைத்தனர் நினைவுத் தூபிக்கான மலர் மாலையினை வேலன்சுவாமிகள் நெடுந்தீவு பங்குத்தந்தை ஆகியோர் இணைந்து அணிவித்ததைத் தொடர்ந்து சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் மற்றும் எழுத்தாளர் வி. ருத்திரன் ஆகியோரும் இணைந்து மலர்மாலை அணிவித்தனர் இதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

நினைவேந்தல் குழுமத்தின் தலைவர் விசுவலிங்கம் ருத்திரன் தலைமையில் நினைவேந்தல் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றது.
நினைவுரைகளினை வேலன் சுவாமிகள் , சைவ மதகுரு புவனேந்திர சர்மா , கத்தோலிக்க பங்குத்தந்தை எஸ். பத்திநாதன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

குமுதினி படுகொலை நினைவுகளை சுமந்து வரும் பசுந்தீவு ருத்திரன் எழுதிய “உப்புக் கடலை உரசிய நினைவுகள்” எனும் கவிநூல் குமுதினிப் படகின் முன்தளத்தில் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலினை தவத்திரு வேலன் சுவாமிகள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை கதிர் தனியார் நிறுவன உரிமையாளர் கு. ஜனேந்திரன் பெற்றுக்கொண்டார். அத்துடன் படகில் வைத்ததே மதகுருமாருக்கான நூல் பிரதிகளும் வழங்கப்பட்டதுடன் குமுதினி தாய்க்கு ( படகு ) மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கவிநூலுக்கான ஆய்வுரையினை சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் வழங்கியிருந்தார்.

நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் அவலங்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

இதேவேளை காலை 7 .00 மணிக்கு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், தென்னிந்திய திருச்
சபை ஆலயம், மற்றும் தேவசபை ஆலயம் என்பவற்றில் சம நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.