கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (28) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் .

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

புதிதாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் ,அட்டாளைச்சேனையில் இருவருக்கும், ஒருவர் ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார பணிமனைக்குட்பட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்களின் குடும்பங்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

இதேநேரம் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என கூறிய அவர் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பொது மக்கள் சமுக இடைவெளி பேனாமை, முக்க்கவசம் அணியாமை, பலர்ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன.இதேவேளை அக்கரைப்பற்று சுகாதாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள் என்றார் .

 

 

 

 

(பாறுக் ஷிஹான்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.