கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆலயங்கள் இந்து மக்கள் வறுமையை போக்கமுடியாதா? காரைதீவில் மேலதிக அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி

( வி.ரி. சகாதேவராஜா)

வறுமையை காரணம் காட்டி இந்து மக்கள் மதம் மாற்றப்படுகின்றார்கள் என்று
கூக்குரலிடுகின்றோம். ஏன் இந்து தனவந்தர்களால், இந்து அமைப்புகளால்
இந்துமக்களின் வறுமையை துன்பத்தை போக்குவதற்கு முடியாதா?  கோடி கோடியாய்
சம்பாதிக்கின்ற ஆலயங்களுக்கு இது முடியாதா?

– இவ்வாறு, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்
காரைதீவில்  இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய போது கேள்வி
எழுப்பினார்.

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் அம்பாறை மாவட்ட கிளை, மாவட்டத்தில் உள்ள
360 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தலா 25 கிலோ கோதுமை மற்றும்
25 கிலோ அரிசி என்பவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு விபுலானந்தா
மணிமண்டபத்தில் நடைபெற்றது .

இந்து ஸ்வயம் சேவக சங்க அம்பாறை மாவட்ட தலைவர் இரா.குணசிங்கம் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக  அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில் –

இந்து மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மாற்று மதத்தினர்  உதவியை
செய்து மதம் மாற்றி வருகின்றனர். இதனை தொடர்ச்சியாக காணக்கூடியதாக
இருக்கின்றது. இந்த நிலைமையை ஏன் இந்து அமைப்புகளால்  இணைந்து நிவர்த்தி செய்ய முடியாது? அதுபோல கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய
பெரிய ஆலயங்கள் இந்த இந்து மக்களின் வறுமையை அல்லது துயரை ஏன் துடைக்க
முடியாது? அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அதே போல் மட்டக்களப்பு
மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய ஆலயங்கள் சேர்ந்தாலே  இந்து மக்களின்
வறுமையை நிச்சயம் போக்க முடியும்.

இறைவன் நேரடியாக வந்து மக்களின் பிரச்சினைகளை – தேவைகளை – ஒருபோதும் தீர்த்து
வைப்பதில்லை. மாறாக, சில மனிதர்களூடாக அமைப்புகளூடாக நம்மை போன்றவர்களைக்
கருவியாக பயன்படுத்தியே மக்களின் பிரச்சினைகளை – தேவைகளை – தீர்த்து
வைக்கின்றார்.

எனவே அந்த அமைப்பினர் மனிதாபிமானத்துடன் செயற்பட்டு இந்து மக்களின்
வறுமையை போக்க முன்வர வேண்டும் என்று கூறி வருகின்றோம். ஆனால் அது
அவர்களது காதுகளில் ஏறுவதாக இல்லை.

நாங்களும் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் ஆலயங்கள்
தங்கள் திருவிழாக்கள் என்றால் மக்களிடம் கையேந்துகிறார்கள். அதே மக்கள்
அனர்த்தத்தில் அல்லது நாட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித்
தவிக்கின்ற பொழுது அந்த மக்களுக்கு பெரிதாக உதவுவது இல்லை. இதுபோன்ற
காரணங்களால் அவர்கள் மதம் மாறுவதில் ஒரு பக்கம் நியாயமும்
இருக்கின்றது.

எனவே அந்த கேள்விக்குரிய விடை எம்மிடம் தான் உள்ளது என்பதை மறந்து விட முடியாது. இங்கு அமெரிக்காவில் வாழ்கின்ற இந்து அன்பர்கள்  அளித்த அன்பளிப்பு இந்த மக்களுக்கு வழங்கப்படுகின்றது. அதையிட்டு அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம் .ஆனால் இதையிட்டு சந்தோசம் அடையமுடியாது .ஏனென்றால் இங்குள்ள இந்து தனவந்தர்கள் அமைப்புக்கள் ஆலயங்கள் இந்த விடயத்தை கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மத மாற்றங்களைத் தவிர்க்கலாம் தடுக்கலாம். இங்கே இந்து சேவக சங்க அம்பாறை மாவட்ட கிளை பாரியதொரு பணியை செய்து வருவதையிட்டு சந்தோசமடைகின்றேன். மேலதிக அரசாங்க அதிபர் என்ற வகையில் காரைதீவிலிருந்து ஏனைய  தமிழ் கிராமங்களில் இருந்து
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்து அன்பர்கள் இங்கு கஷ்டப்பட்டு வாழ்கின்ற இந்து மக்களுக்கு உதவுவதற்கு நீங்கள் நேசக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். – என்றார்.

முதற்கட்டமாக சம்மாந்துறை காரைதீவு பிரதேசங்களைச் சேர்ந்த 169 விதவைத்
தாய்மார்களுக்கு இந் நிவாரணம் முறைப்படி வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேசத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர்  சிறிகாந்தன் நன்றியுரையாற்றினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.