இந்த நாட்டை ஆண்ட எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

சுமன்)

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல யுத்திகளைக் கையாண்டனவே தவிர எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டின் வடக்கு கிழக்கு தாயகத்தில் மட்டுமல்லாது உலகத்திலே பல நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரிலே கல்முனை மாநகரசபை உறுப்பினர்களால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நாட்டில் ஒரு நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும். இங்கு வாழுகின்ற தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும் எனற அடிப்படையில் தமிழ் மக்கள் போராடியிருந்தார்கள். அந்தப் போராட்டம் ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் 2009க்கு முற்பட்ட காலத்தில இருந்தது. இதில் கவனஞ்செலுத்தாத இந்த அரசாங்கம் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல யுத்திகளைக் கையாண்டு இலட்சக் கணக்கான மக்களை ஒரு இடத்திலே கொத்துக் கொத்தாக அழித்த நாளாக இன்றைய நாளை நாங்கள் அனுஷ்டித்துக் கொண்டு வருகின்றோம்.

இந்த நாட்டிலே தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த அவலநிலை இந்த நாட்டில் வாழுகின்ற எந்த இனத்திற்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், இந்த இலங்கையிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தங்களது கலாச்சாரத்தை, இருப்பை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவும் போராடியவர்கள். ஆனால் இந்த நாட்டை ஆண்டுவந்த எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை.

அன்று முள்ளிவாய்க்காலிலே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கப் பெறவில்லை. சர்வதேச ரீதியாக வழங்கப்படுகின்ற ஆலோசனைகளைக் கூட ஏற்று இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உலக நாடுகளும் அறிந்துகொண்டுள்ளன.

அந்த வகையிலே இந்த நாட்டிலே வாழுகின்ற பூர்வீக இனம் தொடர்ச்சியாக இவ்வாறான அடக்கு முறைக்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படையில் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக எமது மண்ணிலே ஏற்பட்ட அவலங்களை நினைவுகூர்ந்து இவ்வாறான நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

நிச்சயமாக தமிழர்களுக்கு ஒரு நிலையான சமாதானம் கிடைக்கப் பெற வேண்டும் என்ற எங்களது ஜனநாயக ரீPதியான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த அடிப்படையில், இப்போது வாழுகின்ற எமது இளைய சமூகம் எமது மண்ணிலே எமது இனம் வாழ்வதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அவ்வாறு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திலே தமிழர்கள் மட்டுமல்லாது ஏனைய .இனங்களும் இணைந்து சமத்துவமான ஒரு அரசியற் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்நின்று உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.