துர்நாற்ற விவகாரம் தொடர்பில் சுகாதார தரப்பின் உயர்மட்ட கலந்துரையாடல் : முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டது.

சாய்ந்தமருதில் சில நாட்களாக பிந்திய மாலை பொழுது முதல் அதிகாலை நேரம் வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச வாசிகள், பொது அமைப்புக்கள் இந்த தூர்நாற்றம் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து சாய்ந்தமருது விலங்கறுமனை அடங்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதாரத்துறையினர் பல உண்மைகளை இதன்போது கண்டறிந்தனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களுடனான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸின் தலைமையில் வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று (17) இடம்பெற்றது.
கருத்தாடல்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர  ஆணையாளர் எம். சி. அன்ஸார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், மாநகர பொறியியலாளர் எம்.ஜே. எம். ஜௌசி, மாநகர மிருக வைத்திய அதிகாரி டாக்டர் வட்டபொல்ல, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா பஷீர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை மாநகர சபை சுகாதார குழுவின் தவிசாளர் சட்டத்தரணி ரோஷன் அக்தர், மாநகர சுகாதரப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யூ. எல்.எம். இசாக்,  சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் முஹம்மட் நளீர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.எம். சம்சுதீன், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள்,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிறைவேற்று உயர் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்,  பொதுச்சுகாதார பரிசோதகர்கள், விலங்கறுமனை உரிமையாளர் எம்.எஸ்.எம். அஷ்ரப், இவ்விடயம் தொடர்பில் ஆராயும் ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸ் ஆகியோர் தனது களவிஜயத்தில் தாங்கள் அடையாளப்பப்படுத்திய துர்நாற்றம் வரும் சந்தேக இடங்கள் தொடர்பிலும், தீர்வை பெறவேண்டிய வழிவகைகள் தொடர்பிலும், தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் வெண்திரையின் காட்சிகளின் மூலம் சபைக்கு விளக்கமளித்தார். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறுவது தொடர்பில் ஆழமாக கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றதுடன் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.