நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – 121 ரூபாய்க்கு எரிபொருள்?

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும், எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் தற்போதைய நிலையில், மக்களை ஒடுக்கி அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் தற்போதைய விலையை விட குறைவான விலைக்கே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 121 ரூபாய் 19 சதத்திற்கே அவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளியான தகவலானது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்துள்ளது.
நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
இவ்வாறு மக்களுக்கு அறிவித்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் சிறப்புரிமை வழங்கப்படுவது குறித்து மக்கள் கடும் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸாரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் வழங்கப்படுகின்றமைக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்