விசாரணைக்கு வருகின்றது ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலை விவகாரம்! அகப்படுவாரா பிள்ளையான்?

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரகீத் ஏக்னலிகொட, ஐயாத்துரை நடேசன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உள்ளிட்டவர்களின் படுகொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

இணையவழியாகவும் சாட்சிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவதை அறியமுடிகின்றது.

அதேவேளை, TMVP என்ற பெயரில் இயங்கிவருகின்ற அமைப்பின் சில தலைவர்கள் செய்ததாகக் குற்றம் சுமத்தப்படுகின்ற சில படுகொலைகள், ஆட்கடத்தல்கள், பாலியல்வல்லுறவுகள் போன்றன தொடர்பான முதற்தர ஆதாரங்களை முக்கியமான சிலர் வழங்கியுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் சிறிலங்கா புலனாய்வுத்துறையில் பணியாற்றி பின்னர் மேற்குலக நாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள உயர்அதிகாரி ஒருவரும், TMVP அமைப்பில் முன்னர் செயற்பட்டு பின்னர் அந்த அமைப்பினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் மேகுலக நாடு ஒன்றிற்குத் தப்பிச் சென்றுள்ள அந்த அமைப்பின் கொள்கை பரப்புச்செயலாளரும் TMVP அமைப்பு மேற்கொண்ட பல்வேறு குற்றச்சொயல்கள் பற்றிய சாட்சிகளை பதிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பாக ரீ.எம்.வீ.பி அமைப்பின் தலைவர் பிள்ளையான் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள படுகொலைகள் தொடர்பான பல ஆதாரங்களை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அவர்களது ஏற்பாட்டில், தற்பொழுது இலங்கையில் தங்கியிருக்கின்ற சில நேரடிச் சாட்சிகளின் வாக்குமூலங்கள் கூட இணையவழியாக பதிவுசெய்யப்பட்டுவிட்டதாகவும் தெரியவருகின்றது.

கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் TMVP அமைப்பின் சில தலைவர்கள் மீதான விசாரணைகள் சிலங்கா அரசால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது அழுத்தமாக பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் TMVP அமைப்பின் தலைவர் பிள்ளையான் என்பவர் கைதுசெய்யப்பட்டு, சுமார் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததும், பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட படுகொலை, பேராசியர் தம்பையா படுகொலை, ஊடகவியலாளர் நடேசன் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை என்று பல படுகொலைகளை மேற்கொண்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற TMVP அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்று நம்பப்படுகின்றது.

மேற்குலகின் பொருளாதார உதவிகளிலேயே ஒட்டுமொத்த இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கின்ற இந்த நிலையில், ஜனநாயகத்திற்கு எதிரானதும், மனிதத்திற்கு எதிரானதுமான சில முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டேயாகவேண்டும் என்ற அழுத்தங்களை சிறிலங்காவின் ஆழும் அரசாங்கத்தின் மீது மேற்குலகம் பிரயோகித்துவருவதாகவும் தெரியவருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்