முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் பேராசிரியரானார் கலாநிதி எம். எச். தௌபீக்!

நூருள் ஹுதா உமர்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின்  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம். எச். தௌபீக் அவர்கள் 03.02.2021 முதல் முகாமைத்துத் துறையில் பேராசிரியராகவும் (Merit Professor) 30.05.2022 முதல் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைமைப் பேராசிரியராகவும் (Professor of MIT (Cadre Chair)) பல்கலை கழக பேரவையால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கொழும்பில்  தனியார் நிர்வனமொன்றில் முகாமையாளராக பணிபுரிந்துகொண்டிருந்த பேராசிரியர் தௌபீக் அவர்கள்  வர்த்தக நிர்வாக பிரிவில் தகவல் முறைமையில்  சிறப்புப் பட்டம் பெறும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக வருகை தரும் விரிவுரையாளராக 2002 ஆம் ஆண்டு அழைக்கப்பட்டார்.  பின்னர் 2003 இலிருந்து முழுநேர விரிவுரையாளராக இணைத்துக்கொள்ளப்படட இவர் தகவல் முறைமைப் பாடப்பிரிவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து தகவல் முறைமை பாடத்திற்கும்,  முகாமைத்துவ  தகவல் முறைமைப் பிரிவின் வளர்ச்சிக்கும்  குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இருபது வருடங்கள் பல்கலைக்கழக கற்பித்தல்; அனுபவம் கொண்ட இவர், பல்கலைக்கழகம் மேற்கொண்ட பல திட்டங்களுக்கும்,  சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளுக்கும் பாரிய  பங்களிப்பு செய்ததோடு, முதுமாணி பட்டதாரி பிரிவின் ஒருங்கிணைப்பாளர், வெளிவாரிப் பட்டப்பிடடிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள்  நிலையத்தின் பணிப்பாளர் போன்ற பல பதவிகளையும் வகித்துள்ளார். பதினைந்திற்கும்   மேற்பட்ட நாடுகளில் நடை பெற்ற   சர்வதேச ஆய்வு மாநாடுகளில் கலந்து கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதோடு உள்ளூர் மற்றும் சர்வதேச ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
கல்முனையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் தௌபீக் அவர்கள்  மர்ஹும் உ.மு. ஹுசைன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், சாஹிரா கல்லூரி கல்முனை), ஆ. மரியம் வீவி அவரிகளினதும் மகனாவார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-பஹ்ரியா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லூரியிலும் கற்று, 1994 இல் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் படிப்பிற்கு அனுமதி பெற்றார். ஆனால், இப்பபிராந்தியத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக தங்கள் கல்வியை தொடர முடியாத முஸ்லிம்; மாணவர்கள் தங்களுக்கென, தனியான பல்கலைக் கழகம் அமைப்படவேண்டும் என்ற போராட்டத்தை ஆரம்பித்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைப் பெற்றுக்கொண்டனர். இந்த போராட்டத்தில் முன்னின்றவர்களில் இவரும் முதன்மையானவர். பேராசிரியர் தௌபீக் அவர்கள்  இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது வணிக நிர்வாக முதுமாணி பட்டத்தை 2000ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஹம்தாட் பல்கலைக்கழகத்திலிருந்தும்  முதுகலை டிப்ளோமாவை 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் மேலாண்மை கல்லூரியிருந்தும் பெற்றுக்கொண்டார். மேலும், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டத்தை 2018 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்