கொடிகாமம் மாவீரர் துயிலுமில்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கண்டனம்.

சாவகச்சேரி நிருபர்

 

கொடிகாமத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல காணியை பாதுகாப்பு அமைச்சிற்கு சுவீகரித்துக் கொடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு சாவகச்சேரி பிரதேசசபையின் உபதவிசாளர் செ.மயூரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த 20/05/2022 அன்று தென்மராட்சிப் பிரதேச செயலர்,நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொடிகாமத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளை சுவீகரித்து/கொள்வனவு செய்து பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்குவதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த செயற்பாடு பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
கொடிகாமம் படை முகாம் அமைந்துள்ள துயிலுமில்ல காணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களது உடலங்கள் விதைக்கப்பட்டுள்ளன.
குறித்த காணிகளை சுவீகரித்து பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்க அரச அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் முன்னின்று செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது.
இச் செயற்பாட்டினை முற்றுமுழுதாக கண்டிக்கிறோம். குறித்த தனியார் காணிகளை உரிமையாளர்கள் பல தேவைகளுக்காக விற்க முன்வந்துள்ளனர்.எனவே குறித்த காணிகளை தனவந்தர்கள் கொள்வனவு செய்து தனிப்பட்ட அல்லது பொதுத் தேவைகளுக்காக காணியைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.அத்துடன் எமது பிரதேச அரச அதிகாரிகள் உடனடியாக இவ்வாறான வெளிப்படைத்தன்மையற்ற செயற்பாடுகளைக் கைவிட்டு மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டும்.மேலும் சாவகச்சேரி பிரதேசசபை குறித்த துயிலுமில்ல காணியை இராணுவ ஆளுகையில் இருந்து விடுவித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்