தனது நாட்டு மக்களை படுகொலை செய்ய வாங்கிய கடனே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.-நகரசபை உறுப்பினர் விஜயேந்திரன்.

சாவகச்சேரி நிருபர்
தனது சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்வதற்கு வாங்கிய கடன் சுமையே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என சாவகச்சேரி நகரசபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வி.வியஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
13ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு மே மாதம் 18ஆம் திகதியும்,அதற்கு முந்தைய நாட்களிலும் முள்ளிவாய்க்கால் எனும் தமிழர் தாயக பூமியில் பௌத்த சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தால், சர்வதேச போர் நடைமுறைகளை மீறி தமது நாட்டின் குடிமக்களையே இனப்படுகொலை செய்த துன்பியல் நிகழ்வு நடந்தேறியது.
சர்வதேச நிறுவனங்களை வெளியேற்றி விட்டு எதுவித சாட்சியுமின்றி தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும்,பொஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்தி சிறுவர்கள்,குழந்தைகள்,முதியோர்கள், அங்கவீனர்கள், கர்ப்பிணிகள் என்ற வேறுபாடின்றி இனப்படுகொலை செய்தார்கள்.
பாதுகாப்பு வலயங்களை அறிவித்து விட்டு அங்கு தஞ்சமடைந்தவர்கள் மீதும்,வைத்தியசாலைகள் மீதும் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழர்களைக் கொன்றழித்தனர். அதற்கு காரணம் நாம் தமிழர்கள்.ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த்தேசம், இறைமை அங்கீகரித்த தீர்வை வலியுறுத்தியதற்காகவே அழிக்கப்பட்டோம்.
யுத்தம் முடிந்த பின் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களைத் தேடி அவர்களது உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சிங்கள பேரினவாத அரசு நீதி வழங்கப்போவதில்லை.
சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்ய வாங்கிய கடன் சுமையே இன்று நெருக்கடி நிலைக்கு பிரதான காரணம்.இந்த நெருக்கடியில் இருந்து மீள புதிய அரசியலமைப்பின் மூலம் மேற்குலக நாடுகள் போல் அனைத்து மதங்களும் சமம் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு அவர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை சர்வதேசத்தினால் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.அதுவரை அழகிய இந்த இலங்கைத் தீவில் இனப்பிரச்சனையோ, பொருளாதாரப் பிரச்சனையோ தீரப்போவதில்லை.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.