துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பை இடை நிறுத்தியமை 19 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஓர் நன்மை : வை எல் எஸ் ஹமீட்.

நூருல் ஹுதா உமர்

துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பை இடை நிறுத்தியமை 19 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஓர் நன்மையாகும். 20 வது திருத்தம் 19 இன் பல விடயங்களை மாற்றியிருந்தாலும் சில விடயங்கள் மாற்றப்படவில்லை. அதில் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத் தொடுப்பதும் ஒன்றாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி வை எல் எஸ் ஹமீட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 19 இற்கு முன், ஜனாதிபதிக்கெதிராக அவருடைய உத்தியோகபூர்வ கடமை ரீதியாகவோ, தனிப்பட்ட ரீதியாகவோ எந்த வழக்கும் தாக்கல் செய்ய முடியாது. இது 19 இல் மாற்றப்படவில்லை. இன்றும் தொடர்கிறது. சுருக்கமாக, ஜனாதிபதிக்கெதிராக ( அவர் பதவியில் இருக்கும்வரை) எந்த வழக்கும் தொடரமுடியாது. 1978ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அதுதான் நிலைப்பாடு.
19 இற்குமுன் அவரின்கீழ் வருகின்ற அமைச்சுக்களில் அவரது உத்தியோகபூர்வ செயற்பாடுகள் தொடர்பாக வழக்குத் தொடரமுடியும். ஆனால் அதில் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிடமுடியாது. சட்டமா அதிபரைத்தான் பிரதிவாதியாக குறிப்பிடவேண்டும். இது 19 இல் மாற்றப்படவில்லை. இன்றுவரை தொடர்கிறது.

19 இற்கு முன், அவர் ஜனாதிபதி என்ற முறையில் செய்கின்ற எந்தவொரு உத்தியோகபூர்வ செயற்பாட்டிற்கெதிராகவும் வழக்குத் தொடரமுடியாது. ஆனால் 19 இல் இது மாற்றப்பட்டு அவ்வாறான விடயங்கள் தொடர்பாகவும் வழக்குத்தொடர இடம் வழங்கப்பட்டது. (ஜனாதிபதியின் யுத்தம் அல்லது அமைதி பிரகடனப்படுத்தும் அதிகாரத்தைத்தவிர). இது 20 இல் மாற்றப்படவில்லை. எனவே, இன்றும் அதேநிலை தொடர்கிறது.

ஜனாதிபதி ஒரு தண்டனைக் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பின் சரத்து 34(1)(a) இன் பிரகாரம் ஜனாதிபதி என்ற முறையில் வழங்கப்பட்டிருக்கின்றதே தவிர, தனக்கு கீழ்வரும் எந்த அமைச்சின் காரணமாகவும் அல்ல. அதாவது, மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் அதிகாரம்.
இந்த அதிகாரத்தைத்தான் 19 இற்குமுன் கேள்விக்குட்படுத்த முடியாத நிலை இருந்தது. 19 இற்குப்பின் இன்றுவரை அந்த வாய்ப்பு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே குறித்த வழக்கு தொடுக்கப்பட்டு இந்த இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இது 19 இன் மூலம் கிடைத்த ஓர் நன்மையாகும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.