பொருளாதார மற்றும்சமூக நெருக்கடி நிலைமை, இயல்பு நிலைக்குதிரும்பும் வரை நிதிச் செலவினங்களை உடனடியாக குறைக்குக – அமைச்சின் செயலாளர் அறிவுரை!

பைஷல் இஸ்மாயில்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி நிலைமை, இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் நிதிச் செலவினங்களை உடனடியாக குறைக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் தனது அமைச்சின் கீழுள்ள சகல மாகாண திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

 

தனது அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து திணைக்கள தலைவர்களுடனான தொழில்நுட்ப கலந்துரையாடல் நேற்று மாலை (31) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றபோதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கி வைத்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண மக்களும் அதே நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில், அனைத்து நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் தமது நிதி ஒதுக்கீட்டை மிகச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் வழங்கியுள்ளார்.

 

தங்களது திணைக்களத்திலும், திணைக்களத்தின் கீழுள்ள நிருவனங்களிலும் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களை அச்சிடுதல், அத்தியாவசியமற்ற உத்தியோகபூர்வ போக்குவரத்து நடவடிக்கைகள், இதுவரை ஆரம்பிக்கப்படாத அத்தியாவசியமற்ற திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

உலக வங்கியின் நிதியுதவிடன் முன்னெடுக்கப்பட்டு வடுகின்ற வேலைத்திட்டங்களை மிக நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.