யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இணையவழிக் கலந்துரையாடல்.
சாவகச்சேரி நிருபர்
நெருக்கடி நிலைமைகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பது தொடர்பாக யாழ் மாவட்டத்தை மையப்படுத்திய இணைய வழிக் கலந்துரையாடல் 01/06/2022 புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.
காலை 10மணிக்கு ,கடந்த 2021ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய வீட்டுத்திட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலை தொடர்பாகவும்,
காலை 11.30 மணிக்கு தற்போதைய நெருக்கடி நிலைமையில் சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும்,
பிற்பகல் 1.30 மணிக்கு எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகங்களை சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகள்,
நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி பொருட்கள் பதுக்கப்படுவதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இணையவழி மூலம் ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலர்கள்,விவசாயத் திணைக்கள அதிகாரிகள்,சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள்,பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர் உள்ளிட்டோர் இணையவழி மூலமாக கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை