எமது நாட்டு நிலைமையை கணிக்க பொருளாதார நிபுணர்கள் தேவையில்லை-பிரதேசசபைத் தவிசாளர் வாமதேவன் சுட்டிக்காட்டு.

சாவகச்சேரி நிருபர்
எமது நாட்டின் பொருளாதார நிலைமைகளை கணித்துச் சொல்ல பொருளாதார நிபுணர்கள் தேவையில்லை சாதாரண மக்களுக்கே நாட்டின் எதிர்கால நிலை பற்றி நன்றாக புரிந்திருக்கும் என சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி பேசாமல் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அந்தளவிற்கு நெருக்கடி நிலைமை சகலரையும் பாதிக்கின்றது.குறிப்பாக மலையக மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.அவர்களது பிரதான உணவு கோதுமா மாவினால் ஆனதாக காணப்படுகிறது.கோதுமா மா 300ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் மக்கள் எவ்வாறு வாழ்வது?
மக்கள் உயிரோடு இருந்தால் தான் நாடு நிலைக்கும்.பலரும் நாட்டை விட்டுச் செல்லத் துடிக்கின்றனர்.கடந்த நான்கு மாத காலங்களில் கடவுச்சீட்டுப் பெற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.இந்த நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.மூன்று,நான்கு மாதங்களில் பட்டினி வரும் என்று பொருளாதார நிபுணர்கள்,அரசியல்வாதிகள் கணிக்கின்றனர். இந்த தகவலைச் சொல்ல நிபுணர்கள் தேவையில்லை.சாதாரண குடிமகனுக்கே எமது நாட்டின் எதிர்கால நிலை நன்றாகப் புரிந்திருக்கும்.கடன் பெற்று நாட்டை கட்டியெழுப்ப முடியாது.எதிர்வரும் காலத்தில் கடனே பெற முடியாமல் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.நாட்டின் முதல் கூறு வீடு.ஒரு வீட்டின் தலைவன் கடன் பெற்று நீண்ட காலம் குடும்பத்தை கொண்டு நடாத்த முடியாது.இறுதியில் வீதியில் நடமாட முடியாத நிலை தான் ஏற்படும்.இதற்கு முன்னர் எரிபொருள் 5,10 ரூபாய் தான் அதிகரித்தது.அதற்கு கூட கண்டனம் தெரிவித்து சைக்கிளிலும், மாட்டு வண்டியிலும் பாராளுமன்றம் சென்றவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இன்று எரிபொருள் ஒரே தடவையில் 100ரூபாய் வரை அதிகரிக்கிறது.எரிபொருள் விலை ஏற்றம் சகல துறைகளிலும் தாக்கம் செலுத்தும்.விலை எகிறினாலும் எரிபொருள் பெற மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்