கல்முனையில் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் 18ஆம் திகதிக்கு பின்னரே; முதல்வர் றகீப் அதிரடி நடவடிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவுகளுக்கான புதிய வகுப்புகள், கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் இம்மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னரே ஆரம்பிக்கப்படுமென மாநகர சபை அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் டியூட்டரிகளின் நடத்துனர்களுடன் நடாத்திய கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கலந்துரையாடல் வியாழக்கிழமை (02) மாலை, மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவுகளில் கல்வி கற்கவுள்ள புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை சனிக்கிழமை (04) ஆரம்பமாகும் என டியூட்டரிகளினால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுற்ற கையோடு இவ்வகுப்புகள் நடத்தப்படுவதற்கு பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தரப்பில் இருந்து அதிருப்தி வெளியிடப்பட்டதன் பேரில், மாணவர்களின் ஓய்வைக் கருத்தில் கொண்டு, டியூட்டரி நடத்துனர்கள் முதல்வரினால் அவசரமாக அழைக்கப்பட்டு, அவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மாணவர்களின் நலன் கருதி மாநகர சபையினால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும் இதன்போது முதல்வரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக டியூட்டரிகளின் சுற்றுச்சூழல் சுத்தம், காற்றோட்ட வசதிகள், மாணவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு போன்றவை உறுதிப்படுத்தப்படுவதுடன் மலசலகூட வசதிகளும் கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் கட்டணங்கள் நியாயமான முறையில் அறவிடப்பட்ட வேண்டும் எனவும் முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டது.

இவ்விடயங்களில் அலட்சியப்போக்குடன் செயற்படும் டியூட்டரிகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்பதுடன் அவற்றை இழுத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் இதன்போது தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்