வீட்டுத்தோட்டச் செய்கைகளை வெற்றியடையச் செய்ய நடவடிக்கை எடுங்கள்-அங்கஜன் வேண்டுகோள்.\

சாவகச்சேரி நிருபர்
நாட்டில் தற்போது நிலவி வருகின்ற நெருக்கடியான காலகட்டத்தில் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை வெற்றியடையச் செய்ய பிரதேச செயலக மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.01/06 புதன்கிழமை இணைய வழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரச அதிகாரிகளிடம் அவர் இதனை வலியுறுத்தியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த காலங்களிலும் வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்கப்படுத்தி இருந்தோம்.ஆனால் அது எவ்வளவு தூரம் வெற்றியளித்தது என்பது தெரியவில்லை.ஆனால் இம்முறை கட்டாயம் வீட்டுத்தோட்டச் செய்கையை வெற்றிபெறச் செய்ய உரிய உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீட்டுத்தோட்டங்களை உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பதனை பிரதேச செயலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.அதேவேளையில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக அரச திணைக்களங்களிலும் வீட்டுத்தோட்ட செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மகேசன், யாழ் மாவட்டத்தில் வீட்டுத்தோட்டம் மேற்கொள்ள முதற்கட்டமாக 21ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட இருப்பதாகவும்,அதே வேளையில் அரச திணைக்களங்களிலும் வீட்டுத்தோட்ட செய்கை மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்