காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 3வயதுச் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நிருபர்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் வடக்கு பகுதியில் 01/06 புதன்கிழமை பிற்பகல் காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 3வயதுச் சிறுமி சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
மிருசுவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3வயதான கபிலன் அபிஷா என்ற மூன்று வயதுச் சிறுமி புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் பிரதேச மக்கள்,பாதுகாப்பு தரப்பினர் இணைந்து நடத்திய தேடுதலில் சுமார் 3கிலோமீட்டர் தொலைவில் உள்ள அயல் கிராமமான வரணி மாசேரி பகுதியில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இருந்து இரவு 10மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட சிறுமியின் உடலில் சிறு கீறல் காயங்கள்,முள் குத்திய காயங்கள் காணப்பட்ட நிலையில் சிறுமி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் சிறுமி தனது வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்திற்கு எவ்வாறு சென்றார் என்பது இதுவரை தெரியவரவில்லை.நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் துஸ்பிரயோகங்கள்,கடத்தல் ஆகிய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்