சட்டவிரோத கடற்றொழிலை முன்றாக தடைசெய்க; முல்லை சுற்றுலாக்கடற்கரையில் திரண்ட மீனவர்கள்.

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறுகோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் 02.06.2022நேற்றையதினம், முல்லைத்தீவு சுற்றுலாக் கடற்கரை வளாகத்தில் தமது மீன்பிடி படகுகளை வரிசையாக நிறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்துவரும் நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உரியவர்கள் முன்வருவதில்லைஎன மீனர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கடந்த 19.05.2022அன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில்  சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாலே, முல்லைத்தீவு மாவட்டசெயலர் தலைமையில், மீனவப் பிரதிநிதிகள், முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம், கடற்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதும், இதுவரையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

குறிப்பாக மாத்தளன், இரணைப்பாலை, வலைஞர்மடம் ஆகிய மூன்று பகுதிகளைச்சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களுடன், கொக்கிளாய்ப் பகுதியில் அத்துமீறித் தங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்களுமே இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், இதனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஏனைய 35கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுவதுடன், கடல் வளங்களும் அழிக்கப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களோடு முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலிஸ்ரன் மற்றும், திணைக்களத்தின் கடற்றொழில் பரிசோதகர் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர்.

அப்போது இதுவரையில் சட்டவிரோத மீன்பிடிச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாமை தொடர்பில் மீனவர்கள் குறித்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளரிடமும், கடற்றொழில் பரிசோதகரிடமும் கேள்வி எழுப்பினர்.

கடற்படையினரின் உதவியுடன்தான் தாம் கடலுக்கள் சென்று சட்டவிரோதசெயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியுமெனவும், கடற்படையினரிடம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கடிதம் மூலம் உதவிகோரியிருப்பதாகவும், விரைவில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கருத்தினை ஏற்க மறுத்த மீனவர்கள், சட்டவிரோத தொழில் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்த தமக்கு அனுமதி தருமாறு கோரியதுடன், தமக்கு அனுமதி தரும்பட்சத்தில் தாம் முற்றாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவோம் எனவும் தெரிவித்தனர்.

மீனவர்களின் இக்கருத்திற்கு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து சுருக்குவலைக்கு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வளங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் மீனவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மீனவர்களின் இக் கேள்விக்கு  கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பதிலளிக்கையில்,

ஒன்றரை இஞ்சிக்கும் மேற்பட்ட சுருக்கு வலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 25பேருக்கே இவ்வாறு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக பகல் நேரத்தில் காலை 06.00மணி தொடக்கம், மாலை 06.00மணிவரை மாத்திரமே குறித்த ஒன்றரை இஞ்சிக்கும்மேற்பட்ட சுருக்குவலைத் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் முன்பு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் குறித்த ஒன்றரை இஞ்சிக்கும்மேற்பட்ட சுருக்குவலைத்தொழில் தடைசெய்யப்பட்டிருந்ததாகவும், அதன்பின்பு மீனவர்கள் சிலர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் மீண்டும் அவர்களை அந்த தொழில்நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு கட்டளையிட்டதற்கு அமையவே, தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிபனபாளர் கலிஸ்ரன் தெரிவித்தார்.

எனினும் இக்கருத்தை மறுத்த மீனவர்கள், வழங்கப்பட்ட அனுமதியை மீறி இரவுநேரங்களில் குறித்த சுருக்குவலைத் தொழில் இடம்பெறுவதுடன், தடைசெய்யப்பட்ட வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமெற் அடித்து மீன்பிடித்தல், லைலா வலை தொழில் என்பனவும் இடம்பெறுவதாகவும் தெரிவித்ததுடன், அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தனர்.

அதேவேளை அண்மையில் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில், கொக்கிளாய்ப் பகுதியிலுள்ள தென்னிலங்கை மீனவர்களின் 300படகுகள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுவதாக, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்த கருத்தினை இங்கு சுட்டிக்காட்டிய மீனவர்கள் அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஏன் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

அவ்வாறு சட்டவிரோத மீன்பிடிச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது விடின், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை மூடிவிட்டு கொழும்பிற்குச் சென்றுவிடுமாறு மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் மிகவும் காட்டமாகத் தெரிவித்துமிருந்தனர்.

இதனிடையே மீனவர்கள் இனி இங்கே இனிபேசமுடியிது எனவும், தாம் பேசுவதை இனிக் கேட்குமாறும் கடற்றொழில் பரிசோதகர் அங்கு கூறிய கருத்தால், மீனவர்கள் கோபமுற்று அங்கு சிறிது நேரம் முறுகல் நிலையும் தோன்றியிருந்து.

இந் நிலையில் விரைவில் வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம், கடற்படை அதிகாரியிடம் அனுமதி எடுத்து, கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து கடற்படை அதிகாரியை நேரில் சென்று பார்வையிட்டு பேசி, மிகவிரைவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவோம் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் முன்னிள் வடமாகாதசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.