21ஆவது திருத்தம், ஜனாதிபதி முறை ஒழிப்பு: முஸ்லிம் தரப்புகள் கூட்டாக தீர்மானியுங்கள்; கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி கோரிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டம் மற்றும் ஜனாதிபதி முறை ஒழிப்பு போன்ற விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட அனைத்து முஸ்லிம் தரப்புகளும் ஒரே மேசையில் கூடி, தீர்க்கமான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் என கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி கோரிக்கை வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் முன்னணியின் செயலாளர் செயிட் ஆஷிப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் கட்டமைப்பிலுள்ள குறைபாடுகளும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 20 ஐ ஒழித்து 19 ஐ மையப்படுத்தி 21 ஐ கொண்டு வருவது பற்றி அரசாங்க மட்டத்தில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

இதில் முக்கிய அம்சமாக நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை- முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்று வருகின்றன.

இவ்விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதுவும் இதுவரை ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிட்டதாக தெரியவில்லை. இவர்கள் தாம் சார்ந்திருக்கின்ற அரசியல் கூட்டணிகளின் தீர்மானங்களுடன் ஒத்துப்போகின்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் அவருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்கிற விடயத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற இந்த 03 முஸ்லிம் கட்சிகளும் தமது கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளையே தமது கட்சிகளின் தீர்மானங்களாக எடுத்ததைப் போன்றே இவ்விடயத்திலும் செயற்படுவார்கள் என்றே அறிய முடிகிறது.

தேசிய அரசியல் விவகாரங்களில் கட்சி மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு இத்தலைமைகள் முன்வராமல் பின்னடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் சமூகம் தொடர்பான தீர்மானங்களை அரசியல் தலைமைகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் ஒதுங்கி நிற்பார்களாயின் அது சமூகத்திற்கு பெரும் ஆபத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆகையினால், அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் ஜனாதிபதி முறை ஒழிப்பு போன்ற விடயங்களில் முஸ்லிம் கட்சிகள் முரண்பாடான நிலைப்பாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் தமது ஆலோசனைகளை முன்வைப்பதுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒரே மேசைக்கு அழைத்து, நாட்டினதும் சமூகத்தினதும் நலன் கருதிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்ற அழைப்பை கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி விடுக்கிறது- என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.