பிரதமர் ரணில் மத்திய வங்கி ஆளுநரை மாற்ற கூறினாரா..?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகிக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு தனது நெருங்கிய நண்பரான “தினேஷ் வீரக்கொடியை” நியமிக்க முயற்சிப்பதாகவும், இதனால் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக தம்மை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் தாம் அறிந்திருக்கவில்லை எனவும், அவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் தாம் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், நாட்டுக்காக தாம் முன்வந்து செயற்படுவதாகவும், பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திறைசேரி விவகாரங்களுக்கான “ஆலோசகராக” தினேஷ் வீரக்கொடியை கடந்த வாரம் நியமித்துள்ளதாகவும், வங்கிகளின் முன்னாள் தலைவர் மற்றும் பல முன்னணி தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராக, நிதித்துறையில் தினேஷ் வீரக்கொடிக்கு பரந்த அனுபவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்