போதையற்ற சமூகத்தை உருவாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குக – குச்சவெளி தவிசாளர் வேண்டுகோள்

பைஷல் இஸ்மாயில் –

 

எமது பிரதேசங்களில் போதையற்ற சமூகத்தை உருவாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.

 

போதைவஸ்த்து பாவனை மற்றும் விற்பனைகள் மக்கள் மத்தியில் மிக வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபையினர் குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக்கிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இன்று (15) விஷேட கலந்துரையாடல் சபையின் உப அலுவலக புல்மோட்டை காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

இந்த விஷேட கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளர், புல்மோட்டை பள்ளிவாசல் நிர்வாகத்தினர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, புல்மோட்டை பிரதேச திருமண பதிவாளர், இணக்கசபைத் தலைவர், அனைத்து பள்ளிவாசல்கள் தலைவர், உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது நாட்டில் போதைவஸ்த்துப் பாவனை மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் கொலை, கொள்ளை, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சார்ந்த பிரச்சினை, குடும்பங்களுக்குள் பிரச்சினை போன்ற பல்வேறுபட்ட பல பிரச்சினைகள் மேலோங்கிக் காணப்படுகின்றது.

 

குறிப்பாக, எமது இளம் சந்ததியினர் இதற்கு அடிமையானவர்களாக காணப்படுகின்றனர். இதிலிருந்து அவர்களைப் மீட்டெடுக்காவிட்டால் எதிர்கலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும். அவர்களை மீட்டெடுப்பது எம் அனைவர் மீதும் பொறுப்பும், கடமையுமாகும் என்றும் தவிசாளர் குறிப்பிட்டார்.

 

போதைவஸ்த்து விற்பனை செய்பவர்களை கைது செய்யவும், அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவும் பொதுமக்கள் பொஸிஸாருக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் மிக முக்கியமானதாக இருக்கின்றது. அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே போதைபஸ்த்து பாவனையிலிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாக்கலாம்.

 

அதற்காக, எமது பிரதேசங்களில் உள்ள சகல தரப்பினரும் இதற்கெதிராக செயற்பட முன்வருவதன் மூலமே எமது இளம் சந்ததியினரின் எதிர்கால வாழ்க்கையை ஒரு முன்னெற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.