சாய்ந்தமருதில் எரிபொருள் வளங்களில் முறைகேடு : பிரதேச செயலாளரிடம் தீர்வை கோரி சென்ற மக்கள் !

 

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகவும் இவ்விடயங்களில் பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாகவும் தெரிவித்து சாய்ந்தமருது இளைஞர்கள் தலைமையிலான எரிபொருளுக்கு காத்திருந்தோர்கள் இன்று (21) காலை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கை அலுவலகத்தில் சந்தித்து எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இரவு நேரங்களில் முறைகேடாக எரிபொருள் வழங்கப்படுவதாகவும், பாதுகாப்புக்கு நிற்கும் பாதுகாப்புப் படையினர் இந்த செயலுக்கு துணைபோவதாகவும் தெரிவித்த பொதுமக்கள் எரிபொருள் வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையை உருவாக்குமாறும் தொண்டரணியாக இந்த விடயத்தை கையாள முடியுமான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருப்பதாகவும், நேற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை எரிபொருள் கேட்டும் எரிபொருள் வழங்கப்படாமையினால் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாகவும் பிரதேச செயலாளருக்கு தெரிவித்தனர். இதுதொடர்பில் நிறைய விடயங்களை கலந்துரையாடிய சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் முறையான தீர்வொன்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும், முறைகேடுகள் இடம்பெறுவதை ஆதாரத்துடன் சமர்பிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே திட்டமிட்டு நாளை (22) இடம்பெற உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், அரச உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் இந்த பிரச்சினைக்கான தீர்வைப்பெற தான் முயற்சிப்பதாகவும் இதன்போது தெரிவித்தார். சாய்ந்தமருது எரிபொருள் நிலைய முன்றலில் இருந்து வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு நடைபவனியாக பிரதேச செயலகத்தை வந்தடைந்த பொதுமக்கள் சார்பில் சமூக செயற்பாட்டாளர்களான சக்கி செயின், எம்.எம். ஹில்மி, முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.எம். தில்சாத், எப்.எம். டில்ஷாத் உட்பட பலரும் கலந்துகொண்டு இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்