சட்ட ரீதியாக கிடைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும்-அங்கஜன் எம்.பி வேண்டுகோள்.

சாவகச்சேரி நிருபர்
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஆர்வத்தில் அதிலுள்ள மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் சட்ட ரீதியாக கிடைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பயன்படுத்த இளைஞர் ,யுவதிகள் முன்வர வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.21/06 செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான தேவை நாட்டில் அதிகரித்துள்ளது.இளைஞர்,யுவதிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இதனூடாகவே குடும்ப,சமூக மற்றும் நாட்டின் பொருளாதார பலத்தை கட்டியெழுப்ப முடியும்.வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகள் மீதான மோகம் இளைஞர்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஆர்வத்தில் அதில் உள்ள மோசடிகளால் ஏமாறுவதனை விட சட்டரீதியாக கிடைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பயன்படுத்த இளைய சமுதாயம் முன்வர வேண்டும்.வெளிநாட்டு வேலைவாய்ப்புப் தொடர்பான தகவல்கள் இதுவரை சிங்கள மொழியில் மாத்திரமே வெளிவந்த நிலையில் அது தொடர்பாக என்னால் உரிய துறைசார் அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய நிலையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் குறித்த தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான நடமாடும் சேவை ஒன்றினையும் யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்