மத்திய வங்கி ஆளுநரை நீக்க வேண்டாம்; ஜகத் குமார பிரதமரிடம் கோரிக்கை

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் ஏதேனும் இருந்தால் அதனை இரத்து செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தப்படும் வேளையில் இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டால் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு மேலும் அதிகரிக்கலாம் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதாகவும், பொதுமக்கள் இவ்வாறான பதிவுகளை நம்பி எதிர்வினையாற்றினால் மேலும் குழப்பம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் தொலைநோக்குப் பார்வையற்ற தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்