வருகின்ற சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை.

வருகின்ற சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை
நூருள் ஹுதா உமர்
எதிர்வரும் சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும் என்று கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த வாரம் ஒலுவில் துறைமுகத்துக்கு கள விஜயம் மேற்கொண்டு வந்து சென்ற இவரை இன்று ஞாயிற்றுக்கிழமை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு
இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே ஒலுவில் துறைமுகத்தை கடற்றொழில் வள அமைச்சு பொறுப்பெடுத்து விட்டது. ஆனால் இதை மீள இயங்க செய்கின்ற முயற்சிகள், முன்னெடுப்புகள் ஆகியவற்றில் குறுகிய சுய இலாப அரசியல்வாதிகளின் தடைகளை முறியடிக்க நேர்ந்தது.
தற்போது இயந்திரங்களின் சத்தத்தை இங்கு செவிமடுக்க முடிவது எனக்கு பெருமகிழ்ச்சி தருகின்றது. நிறைவு கட்ட பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. இம்மாத இறுதிக்குள் துறைமுகத்தை திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன்.  எதிர்வரும் 10-15 நாட்களுக்கு இடையில் துறைமுகத்தை திறந்து வைக்க முடியும் என்பது எனது நம்பிக்கை.
ஒலுவில் துறைமுகம் மீண்டும் இயங்க வைக்கப்படும் என்று தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இப்பிரதேச மக்களுக்கு வாக்குறுதி வழங்கி இருந்தார்கள்.  அதையும் நான் கையில் எடுத்திருக்கின்றேன்.
நான் இணக்க அரசியல் செய்பவன். சாணக்கிய அரசியலை முன்னெடுப்பவன். அதன் மூலமாக மக்க்ளின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவன். எனது அரசியல் சரணாகதி அரசியல் அல்ல.
சரணாகதி அரசியல் செய்தவர்கள்தான் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குள் சிக்க வைத்தனர். அவர்களும் சரண் அடைந்து தமிழ் மக்களையும் சரண் அடைய வைத்து விட்டு இன்றும் நீலி கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்