ஆசிரியைகளின் இடமாற்றத்துக்கு இடைக்காலத் தடை – கல்முனை மேல் நீதிமன்றம் அதிரடி. 

 நூருள் ஹுதா உமர்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கல்முனை கல்வி வலையத்தில் கடமை புரியும் 07 ஆசிரியைகளுக்கு வேறு வலையங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 P (4) (b) யின் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உறுதிகேள் எழுத்தாணை மனு (Writ of Certiorari) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ட்றொக்சி முன்னிலையில் கடந்த 24.02.2022 திகதி ஆதரிப்பதற்காக அழைக்கப்பட்டது.

குறித்த வழக்கில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி பிள்ளைநாயகம், மேலதிக மாகாணக் கல்விப்  பணிப்பாளர் ஜெ.அருளானந்தம் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த கெளரவ மேல்நீதிமன்ற நீதிபதி குறித்த வழக்கை மீண்டும் 27.06.2022 (திங்கட்கிழமை) அழைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த எழுத்தானை மனு மீண்டும் நேற்று 27.06.2022 ஆந் திகதி ஆதரிப்பதற்காக அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக தோன்றிய சட்டத்தரணிகள் கிழக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் பிரிவு 185 யின் கீழ் அங்கீகரிக்கப்படாத ஒரு இடமாற்றத்தை மனுதாரர்களுக்கு வழங்கியமை நியாயமற்றதும் சட்டமுறணானதுமாகும் என நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர். குறித்த சமர்ப்பணங்களில் மீது திருப்தியுற்ற கெளரவ மேல் நீதிமன்ற நீதிபதி மனுதார்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதோடு எதிர்வரும் 01.08.2022 யில் கெளரவ மன்றில் தோன்ற பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளார்.

குறித்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.எம். நூர்ஜஹானின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சட்டத்தரணி காலித் முஹைமீன் மற்றும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் தோன்றி இருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.