எரிபொருள் வழங்காமையால்;பிரதேச செயலக வாயிலை மறித்து கிராம அலுவலர்கள் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர்

 

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் 30/06/2022 வியாழக்கிழமை மதியம் பிரதேச செயலக வாயிலை மறித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராம அலுவலர்கள் கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையிலும் கூட 24மணிநேரமும் மக்களுக்காக சேவையாற்றி வருகிறோம்.
அந்தவகையில் தற்போது பொதுமக்களுக்கான எரிபொருள் அனுமதி அட்டை பதியும் கடமையில் ஈடுபட்டு வருகிறோம்.
பரந்துபட்ட தென்மராட்சியில் பெரும்பாலான கிராம அலுவலர்கள் தினமும் 15-20கிலோமீட்டர் தூரம் வரை சென்று கடமையாற்ற வேண்டியுள்ளது.இருப்பினும் இன்று கிராம அலுவலர்களின் மோட்டார்சைக்கிள்களில் அரை லீட்டர் பெற்றோல் கூட இல்லாத நிலை தான் காணப்படுகிறது.
கிராம அலுவலர்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் சென்றால் எரிபொருள் இல்லை எனத் திருப்பி அனுப்புகின்றனர்.நாம் பொதுமக்களுக்கான கடமையில் ஈடுபட வேண்டும்.ஆனால் எமக்கு பெற்றோல் இல்லை என்றால் நாம் எவ்வாறு சேவையில் ஈடுபடுவது?
எமக்கான தீர்வினை பிரதேச செயலர்,அரசாங்க அதிபர் ஆகியோர் பெற்றுத்தர வேண்டும்.எமக்கான தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.என மேலும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

தென்மராட்சிப் பிரதேசம் நாவற்குழி தொடக்கம் எழுதுமட்டுவாழ் வரை 60கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட பரந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்