நாவலப்பிட்டியில் எரிபொருள் கோரி வைத்தியர்கள், தாதிகள் போராட்டம்

சி.எல்.சிசில்-

சுகாதாரத் திணைக்களத்துக்கு உரிய முறையில் பெற்றோல் விநியோகிக்கவில்லை என குற்றம் சுமத்தி நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர்கள் நாவலப்பிட்டி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இன்று(1) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து இன்று காலை எரிபொருள் விநியோகம் ஆரம்பிக் கப்பட்டதுடன், எரிபொருள் நிரப்புவதற்கு வந்த வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் குழுவுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு இன்று 6600 லீற்றர் பெற்றோல் கிடைத்துள்ளதாகவும், சுகாதார பிரிவுக்கு வரையறுக்கப்பட்ட அளவிலான எரிபொருள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸாருக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவத்துக்கு விசுவாசமான குழுவினருக்கும் எரிபொருள் கையிருப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்களின் மேற்பார்வையில் அடுத்த வாரம் முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்ததையடுத்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.