சாவகச்சேரியில் அரச முதியோர் இல்லப் பணியாளர்களுக்கு பெற்றோல் வழங்காமையால் குழப்பநிலை

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரியில் கைதடி அரச முதியோர் இல்ல சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்காமையால், பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பெற்றோல் விநியோகிக்கும் பணி இடைநடுவே கைவிடப்பட்டது.
 சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 01/07 வெள்ளிக்கிழமை சுகாதாரப் பணியாளர்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் அதே வரிசையில் காத்திருந்த கைதடி முதியோர் இல்லப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க மறுத்ததால் குறித்த பணியாளர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த அரச முதியோர் இல்லப் பணியாளர்கள் தமது பணிப்பாளரின் கையொப்பத்துடன், உரிய அனுமதி அட்டை வைத்திருந்தும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகர் அவர்களுக்கு எரிபொருள் வழங்க மறுத்ததால் குறித்த குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக முதியோர் இல்லப் பணியாளர் கருத்துத் தெரிவிக்கையில்;
எங்களை நம்பி ஏராளமான முதியவர்கள் இல்லத்தில் காத்திருக்கின்றனர்.அவர்களை பராமரிப்பதற்கான எரிபொருள் பெறவே இங்கே நான்கு மணி நேரமாகக் காத்திருக்கிறோம்.
ஆனால் எமக்கு எரிபொருள் வழங்க மறுக்கப்படுகிறது.ஆனால் தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் எந்தத் தடையும் இன்றி எரிபொருள் நிரப்பிச் செல்கின்றனர்.என மேலும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

முதியோர் இல்லப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெற்றோல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டு வரிசையில் காத்திருந்த அனைவரும் இராணுவம் மற்றும் பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தனர்.உரிய அனுமதி அட்டையுடன் வரிசையில் நின்றும் எரிபொருள் கிடைக்காததால் முதியோர் இல்லப் பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார்சைக்கிளை உருட்டிக்கொண்டு கைதடி நோக்கி தமது பணியிடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.