மட்டக்களப்பில்  பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி IOC ஊடாக எரிபொருள் விநியோகம்!!

முழு இலங்கையிலும் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில்
மட்டக்களப்பில் நகரில் உள்ள IOC ஊடாக பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இன்று எரிபொருள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை 6600 லீற்றர் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடந்த 4 நாட்களாக இரவு பகலாக வாகனங்கள் சகிதம் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் இன்று  அதிகாலை  பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு பகலாக பொது மக்கள் காத்துக்கிடந்தமையினை உணர்ந்த மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட 6600 லீற்றரில் அதிகளவிலான பெற்றோலினை பொதுமக்களுக்கு  வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 92 ஒக்டேன் பெற்றோலும், 95 ஒக்டேன் பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுருமாருக்கும், எரிபொருள் இன்றி தமது சேவையை வழங்க முடியாதிருந்த மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 100 பேருக்கும், விவசாயிகள் 50 பேரிற்கும், மிக நீண்டகாலமாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் தமது கடமையினை செய்ய முடியாமல் பல்வேறு கஸ்டத்தினை அனுபவித்து வந்த மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரனை அதிகாரிகளுக்கும், சுற்றுலாப் பிரயாணிகளுக்கும், கற்பிணித்தாய்மாருக்கும், விசேட தேவையுடையவர்களுக்குமாக  முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்கியமையானது  சிறந்ததொரு மனிதாபிமான செயற்பாடாக மட்டக்களப்பு மக்களால்
பார்க்கப்பட்டது மட்டுமல்லாது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின்  உரிமையாளரான முத்துக்குமார் செல்வராசா அவர்களுக்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தமது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்திருந்தனர்.
இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்