ஜனாதிபதியாகும் கனவில் இருக்கும் ரணிலை வீட்டுக்கு அனுப்புங்கள் – ஜனாதிபதியிடம் போட்டு கொடுத்த மொட்டு கட்சி எம்.பிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான டொலர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொடுக்க வேண்டும் . ஆனால் அது முடியாத பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க டொலர்களை வழங்காவிட்டால் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகரவால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என ஜனாதிபதியை அண்மையில் சந்தித்த பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்றுள்ள போதிலும் அவரால் ஒரு டொலர் கூட இலங்கைக்கு கொண்டு வர முடியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிதியமைச்சரை வைத்துக்கொண்டு பயனில்லை. எனவே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் மாத்திரம் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் தகுதியான ஒருவரை முழுநேர நிதியமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி கனவில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்கள் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக தனக்கும் கட்சிக்கும் நன்மை செய்யும் வகையில் செயற்படுவதாக கூறியுள்ளனர். மேலும், இன்று நடைபெறவுள்ள அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டொலர் பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப எம்.பி.க்கள் குழுவொன்று தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே நேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டால், டொலர் நெருக்கடி குறித்து அவரிடமும் கேள்வி எழுப்ப எம்.பி.க்களும் தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

-காவியன்-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்