ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக இயங்க வைக்கப்படுவது போல மக்களினது வாழ்வாதார பிரச்சினைகளும் தீர்க்கப்படல்  வேண்டும் – கல்முனை சங்கரரட்ண தேரர் கோரிக்கை

நூருல் ஹுதா உமர்

ஒலுவில்  துறைமுகம் மிக வேகமாக அரசாங்கத்தால் மீள் இயங்க வைக்கப்படுவதை போல இந்நாட்டு மக்களின் வாழ்வாதார, பொருளாதார பிரச்சினைகளையும் அரசாங்கம் மிக வேகமாக தீர்த்து தர வேண்டும் என்று கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரர் தெரிவித்தார்.

கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சியில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன் பிடி துறைமுகம் – ஒலுவில் என்கிற நாமத்துடன் ஒலுவில் துறைமுகம் புதிய மலர்ச்சி பெறுகின்றது. இதை மீள இயங்க வைப்பதற்கான நிறைவு கட்ட பணிகளில் சர்வ சமய தலைவர்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகதீஸன் உள்ளிட்ட உயரதிகாரிகள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் ஆகியோர் திங்கட்கிழமை காலை பங்கேற்றனர்.

இதில் புத்த சமய வழிபாடுகளை மேற்கொண்ட பிற்பாடு ஆற்றிய உரையில் ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரர் மேலும் தெரிவித்தவை வருமாறு. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துரிதமாக செயற்பட்டு இத்துறைமுகத்தை மீள் இயங்க செய்கின்றார். இத்துறைமுகம் கடந்து வந்த பாதைகளும், எதிர் நோக்கிய கஷ்டங்களும், முடங்கி போன கதைகளும் நாம் அறிந்தவைகளே. தற்போது அஷ்ரப் ஞாபகார்த்த துறைமுகம் என்கிற பெயரில் மீள் மலர்ச்சி பெறுகிறது.

பெயர் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் மூவின மக்களுக்கும் சொந்தமான வளமாக இத்துறைமுகம் விளங்க வேண்டும். இத்துறைமுகத்தின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இருக்கின்றது. நானும் அவ்வைத்தியசாலைக்கு அடிக்கடி செல்பவன். சிறப்பான சேவை எல்லா மக்களுக்கும் அங்கு வழங்கப்படுகின்றது. அது போல இத்துறைமுகத்தின் சேவையும் இன, மத, மொழி பேதங்களை கடந்து பொதுவானதாக அமைதல் வேண்டும். நாட்டு மக்கள் இன்று பாரிய கஷ்டங்களை எதிர்கொண்ட வண்ணம் உள்ளனர்.

நாம் ஆட்சியாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம். நாட்டு நலனுக்காக பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உள்ளோம் என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.