கிண்ணியா தள வைத்தியசாலையில் ஒரு வருடமாக சத்திர சிகிச்சை வைத்தியர்(sergean) இல்லாமை கவலை அளிக்கிறது(கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். நஸ்ருதீன்)

 
 
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சத்திர சிகிச்சை வைத்தியர் 2021. 07. 21 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து எவ்வித பதில் ஏற்பாடுமின்றி உயர் கல்விக்காக விடுவிப்புச் செய்யப்பட்டுள்ளார். அன்றிலிருந்து இற்றை வரைக்கும் சுமார் ஒரு வருட காலமாக சத்திர சிகிச்சை வைத்தியர் நியமிக்கப்படாமை மிகப் பெரிய கவலையளிக்கும் செயலாகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். நஸ்ருதீன் வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இவ்விடயத்தை ஒரு புறக்கணிப்பாகக் கூட பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. சத்திர சிகிச்சை வைத்திர்  ஒருவரை நியமித்து தருகிறோம் என உரிய அதிகாரிகள்  பலமுறை வாக்குறுதி அளித்தும் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டே வந்துள்ளது.
கிண்ணியா மக்கள் இன்று சத்திர சிகிச்சைக்காக 15 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள மூதூர் வைத்தியசாலைக்கும் 20 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவழித்து செல்ல வேண்டிய ஓர் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தற்போது எமது நாடும் நாட்டு மக்களும் முகம் கொடுத்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடி, தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவைகளுக்கு மத்தியில் கிண்ணியாவில் இருந்து திருகோணாமலை, மூதூர் வைத்தியசாலைகளுக்கு சத்திர சிகிச்சைக்காக சென்று வருவது என்பது மிகப் பெரிய சவாலாக  மாறியுள்ளது.
போக்குவரத்து சீராக இடம்பெறாமை, வாடகைக்கு வாகனங்களை பெற்றுக் கொள்ள முடியாத இந்நிலையில் நோயாளிகள் உரிய நேரத்துக்கு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமைக்கு  தள்ளப்பட்டுள்ளதோடு, அவர்களது நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பும்  உள்ளது.
மாதாந்தம் சத்திர சிகிச்சை, கிளினிக்  நோயாளிகளுக்கான சிகிச்சைகளை கிண்ணியா வைத்திய சாலையில் கடமையாற்றும் ஏனைய வைத்தியர்களால் வழங்கப்படும் நிலைமையே காணப்படுகின்றது .
தற்போது மக்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இனிமேலும் தாமதிக்காமல் கால இழுத்தடிப்புகளைச் செய்யாமல் மக்களின் நலனுக்காக உடனடியாக    ஒரு சத்திர சிகிச்சை வைத்தியரை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், ஆளுநர் மற்றும் ஆர்.டி.எச்.எஸ் திணைக்கள தலைவர் ஆகியோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்