எரிபொருள் கோரி வீதிக்கு இறங்கிய கல்முனை ஆட்டோ ஓட்டுனர்கள் : அதிகாரிகளுக்கும் மகஜர் கையளிப்பு.

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜுன் லாபீர்

போதியளவு எரிபொருள் வழங்க வேண்டும் என்றும் எரிபொருளினை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்தும் கல்முனை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் கல்முனை எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில் இருந்து  பதாதைகளை ஏந்திக்கொண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (07) முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; வாழ்வாதார தேவைக்காக சுய தொழிலாக மேற்கொள்ளும் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் கோரும் மகஜர் கல்முனைப் பிரதேசத்தில் சுயதொழில் நோக்கத்திற்காக செயற்படும் சுமார் 500 முச்சக்கர வண்டிகள் உள்ளது . இவை அனைத்தும் பொதுமக்களின் அத்தியவசிய தேவையான வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை கொண்டு செல்லல் , பாடசாலை மாணவர்களையும் , ஆசிரியர்களையும் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லல் , தூர இடங்களுக்கு செல்லும் பிரயாணிகளை அவர்களுக்கு பொதுப் போக்குவரத்து இல்லாத நேரங்களில் ஏற்றிச் செல்லல் போன்ற இன்னோரன்ன சேவைகளை ஆற்றிவருகின்ற முச்சக்கர வண்டிகளாகும் .

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக எமது தொழில்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் எமது வாழ்வாதாரமும் பாதிப்படைந்து கற்பினித்தாய்மார்கள் அவசர தேவைக்காக வைத்தியசாலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது . தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் IOC எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வினியோகம் நடைபெற்றுக் கெண்டிருக்கும் வேளையில் கல்முனையில் ஒரே ஒரு எரிபொருள் நிலையம் உள்ளதால் அங்கு சென்று எல்லோருடைய எரிபொருள் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இவ்வாறான நிலையில் அத்தியவசிய சேவையாக கருதப்பட்டுள்ள சேவைகளுக்கு கல்முனையில் இரு Ceypeto எரிபொருள் நிலையங்களான Hana , PMK . Rahuman எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுவருவதை தாங்கள் அறிவீர்கள் . ஆதலால் இவ்விரு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருட்களின் ஏதோ ஒரு பொறிமுறையைக் கையாண்டு எமது முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் வழங்கி எமது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு கோருகின்றோம். இவற்றை கருத்தில் கொண்டு எங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள பொருத்தமான முறை ஒன்றினை செய்து தருமாறும் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில் இருந்து ஆரம்பித்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி  மற்றும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சென்று  மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பாட்டகாரர்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்