மக்களுக்கு ஆற்றிய மகத்தான சேவையினால் தேசியத்தலைவரினால் பெரிதும் மதிக்கப்பட்ட மாமனிதர் மத்தியாஸ் ஐயாவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச முன்னாள் உதவி அரச அதிபரும் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளருமான மாமனிதர் மத்தியாஸ் ஐயா கடந்த 12.07.2022 அன்று மறைந்த செய்தியானது எமக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

இவர் கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக இருந்த போது அவரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அரச உத்தியோகத்தருக்கு இருக்கக்கூடிய அடிப்படைத்தகமையாகிய மக்களை நேசிக்கின்ற மனதைப் பெற்ற பெருமனிதனாக நான் அவரைப் பார்க்கிறேன் மிக நெருக்கடியான காலப் பகுதியில் யுத்தமேகங்கள் இந்த மண்ணை சூழ்ந்திருந்த வேளையில் மக்கள் பணியாற்றுவது என்பது இலகுவானது அல்ல அந்த வேளையில் இங்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியினைக்கடந்து விசேடமாக பொருளாதாரத்தடை காரணமாக ஏற்படுத்தப்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவர் எப்போதும் துவிச்சக்கர வண்டியிலே பணிக்கு வருகின்ற ஒரு பிரதேச செயலாளராக நாங்கள் அவரைப் பார்த்து இருக்கின்றோம்
மக்களை தனது ஆழ்மனதிலே நேசித்ததன் காரணமாக தன் அன்றாட கடமைகளை துவிச்சக்கர வண்டியில் வந்து ஆற்றுவதற்கு இயலும் என்கிற அரசசேவையின் தத்துவத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் அவரின் செயல்கள் ஒவ்வொன்றின் பின்னால் கருணை உள்ளம் இருந்திருக்கிறது ஏழைகள் மீதும் துன்புற்றவர்கள் மீதும் விசேட கரிசனையை செலுத்தி தீர்த்து வைக்கும் பண்புகள் மிக்கவர் எளிமையும் அன்பும் மிகுந்த வாழ்வியலை ஒரு உயர்ந்த பதவியில் இருந்தபொழுதும் மக்கள் விரும்பத்தக்க வகையில் வாழ்ந்திருக்கிறார்
அவருடைய சேவை தனித்து உத்தியோகம் சார்ந்து இருக்கவில்லை தான் சார்ந்திருந்த இனத்தை இனத்திற்காக நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தையும் நன்கு நேசித்து சேவையாற்றியவர். அரச உத்தியோகத்தர்களாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்பது என்பது அதுவும் நெருக்கடியான காலப் பகுதியில் போராட்டத்தை அங்கீகரித்து முன் நின்று செயற்படுவது என்பது மிகவும் அசாதாரணமானது அந்த அசாதாரணமான செயலை இந்த மண்ணில் சாதரணமாக செய்து காட்டியிருக்கிறார்
யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் 1995 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கிளிநொச்சி வந்த போது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து மக்கள் சேவையாற்றிய உன்னதமான உதவி அரசாங்க அதிபர்
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது மக்கள் இடம்பெயர்ந்து அவலங்களை எதிர்கொண்ட போது தனது துவிச்சக்கர வண்டியினூடாக மக்கள் சேவையினை திறம்பட ஆற்றியவர் துவிச்சக்கர வண்டியினூடாகவே மக்கள் பணிக்கு சென்று கொண்டிருப்பதை அவதானித்த தேசியத்தலைவர் ஒரு மோட்டார் சைக்கிளினை வழங்கியிருந்தார் தமிழீழத் தேசியத் தலைவரினால் வழங்கப்பட்ட ஒரு காரணத்திற்காக அந்த மோட்டார் சைக்கிளினை மரியாதை நிமித்தமாக பெற்றுக்கொண்டாரே தவிர அதனை ஓரிரு நாட்கள் பயன்படுத்தி விட்டு அந்த காலத்தில் நவம் அறிவுக்கூடத்தில் பராமரிப்புக்காக இருந்தவர்களை பராமரிப்பவர்கள் துவிச்சக்கர வண்டியினால்த்தான் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் என அறிந்து அந்த மோட்டார் சைக்கிளினை நவம் அறிவுக்கூடத்திற்கே வழங்கியிருந்தார்.
தமிழ் மக்களால் கிளி பாதர் என அழைக்கப்படும் அருட் தந்தை கருணாரடணம் அவர்கள் கிளைமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்டபோது அவர் பணியாற்றிய வடக்கு கிழக்கில் சுயாதீனமாக செயற்பட வட-கிழக்கு மனித உரிமை அமைப்பின் தலைமை பொறுப்பை மத்தியாஸ் ஐயாவே ஏற்றிருந்தார்.
அப்போது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனம் சார்ந்து நடைபெற்ற திட்டமிடப்பட் இனவழிப்பு செயற்பாடுகளை கோவைப்படுத்துவதிலே அவற்றை சர்வதேச மயப்படுத்துவதிலே அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் முக்கியமானது
ஆகவே தனது வாழ்நாட்களில் அரச சேவையினுடாக தான் சார்ந்திருந்த மக்களுக்கு ஆற்றிய பணிகளுக்கு அப்பால் தான் சார்ந்த இனத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் அவர் கோப்பிட்ட மனித உரிமை விடயங்கள் இன்று சர்வதேச சமூகத்தால் வாஞ்சையோடு பார்க்கப்படுகின்ற அல்லது முக்கியத்துவம் கொடுத்து வரலாற்று மூலங்களை ஆராயக் கூடிய அளவிற்கு அந்த பணிகள் இன்றும் நிலைத்திருக்கின்றது
மக்களை ஆழமாக நேசித்த உயர்ந்த மனிதனை நாங்கள் பிரிந்திருக்கின்றோம் அவர் பிரிந்து சென்று இருந்தாலும் அவருடைய வாழ்நாட்களிலே உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்பது போன்று அவர் எண்ணிய செயல்கள் எல்லாம் நல்லதாகவே எங்களுக்கு கிடைத்திருக்கிறது அந்த நினைவுகளோடு அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
சிவஞானம் சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
கிளிநொச்சி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.