வ்ரவேரியன் வோர் -19 ” இறுதியாட்டத்திற்கு மருதூர் விளாஸ்டரை வீழ்த்தி தகுதி பெற்றது மருதூர் பீமா !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய “வ்ரவேரியன் வோர் -19” 20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்திற்கு சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது.

சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய பொதுவிளையாட்டு மைதானத்தில் வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத் தலைவரும், மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான ஏ.எம். றிபாஸ் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தமையினால் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 20 ஓவர்களில் 151 ஓட்டங்களை 09 விக்கட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர் ஏ.என்.எம். ஆபாக் 25 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் றியாஸ் மற்றும் றிழ்வான் ஆகியோர் தலா 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரெஸ்பாஸ் 04 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதனடிப்படையில்152 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் ஆரம்பத்தில் விக்கட்டுக்களை இழந்து தடுமாறினாலும் மத்தியதர வரிசை வீரர்களின் நிதான மற்றும் அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக 18.4 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று நான்கு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். களத்தடுப்பில் விளாஸ்டர் அணியினர் தடுமாறியதும் சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக விளையாடிய மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் றப்ஸான்  36 பந்துக்களில் 65 ஓட்டங்களை பெற்று அதிரடி காட்டினார். மேலும் 35 ஓட்டங்களை றிஸ்ஹான் பெற்றுக்கொண்டார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 65 ஓட்டங்களை பெற்றதுடன் எதிரணியின் ஒரு விக்கட்டையும் வீழ்த்திய சாய்ந்தமருது பீமா விளையாட்டுக்கழக வீரர் எம்.எம். றப்ஸான் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டிக்கு கொழும்பு மாவட்ட வாகன போக்குவரத்து பிரதம பரிசோதகர் ஏ.எல்.எம். பாரூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அதிதிகள் பலரும் கலந்து கொண்டு கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்ததுடன் ஆட்டநாயகனுக்கான கேடயத்தையும் வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.