காலி முகத்திடல் போராட்டத்திற்கு இன்றுடன் 100 நாட்கள்
“கோட்டா கோ கம” என ஜனாதிபதி கோட்டபாய உட்பட ராஜபக்ச குடும்பத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த, காலிமுகத்திடல் போராட்டம் இன்றுடன் 100 வது நாளில் காலடி எடுத்து வைக்கிறது.
ஏப்ரல் மாதம் 9 ம் திகதி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின் வீரியத்தால் மே மாதம் 9 ம் திகதி நிதி அமைச்சராக இருந்த பஷில் ராஜபக்ச, அமைச்சு பதவியை துறக்கவும், ஜூன் மாதம் 9 ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை துறக்கவும், ஜூலை 14 ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவும் இந்த காலிமுகத்திடல் போராட்டம் பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்தநிலையில், இவ் 100 நாள் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு நேற்று இரவு (16ம் திகதி) காலி முகத்திடலில் இடம்பெற்றது. மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிநிகழ்வுகளை மேற்கொள்ள பெரும் திரளானமக்கள் , சிவில் ஆர்வலர்கள், தொழிற்சங்க தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதே நேரம் இதுவரை “கோட்டா கோ கம” என பெயரிடப்பட்டிருந்த குறித்த பகுதி தற்போது “ரணில் கோ கம” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காவியன்
கருத்துக்களேதுமில்லை