குப்பைகளினால் கல்முனை நிரம்பி வழிகிறது : நடவடிக்கை எடுப்பதில் பாராமுகம்.

மாளிகைக்காடு நிருபர்

கல்முனை மாநகர பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஒழுங்கான திண்மக்கழிவகற்றல் இன்மை காரணமாக திண்மக்கழிவுகள் அரச மற்றும் தனியார் காரியாலயங்களுக்கு அருகிலும், பாடசாலைகளுக்கு அருகிலும், சந்திகளிலும், நீர்நிலைகள், மைதானங்கள், கடற்கரை ஓரங்கள் போன்ற பிரதேசங்களில் மக்கள் குவித்து வருகின்றனர்.

இதனால் இரவில் கட்டாக்காலி மாடுகளும், தெருநாய்களும் குப்பைகளை கிளறி விடுவதனால் பாரிய துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அது மாத்திரமின்றி டெங்கு பரவும் இடங்கள் பல இந்த குப்பை கொட்டப்பட்டுள்ள இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வடிகான்கள் கூட மண்களினால் நிரம்பி நீர் வழிந்தோட முடியாத நிலையில் உள்ளது. சில கான் மூடிகள் நீண்ட காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் வீதிபோக்குவரத்தும் சில நேரங்களில் தடைப்படுவதாக மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். ஒழுங்கான திட்டமிடல்களோ, சரியான திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவமோ இல்லாதமையினால் இந்த நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பில் இந்த விடயங்களுக்கு பொறுப்பான கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரை தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது பற்றி கேட்டறிந்த போது, குறித்த பிரச்சினையை நானும் என் கண்களினால் கண்டேன். இந்த விடயம் மாநகர சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழுக்காக காண்கிறேன். இந்த பிரச்சினைகளை தீர்க்க வாகன வசதிகளோ, வாகன சாரதிகளோ, சுகாதார தொழிலாளிகளோ போதியளவில் கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவுக்கு வழங்கப்படவில்லை. மாநகர அதிகார துஸ்பிரயோகங்கள் காரணமாக முதல்வர், ஆணையாளர் ஆகியோரே இந்த நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களே இவற்றெல்லாம் முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஏற்படப்போகும் சகல தீமைகளுக்கும் இவர்களே பொறுப்புதாரிகள். இது தொடர்பில் மாகாண உயர் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம். கல்முனை மாநகர உயர் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பும், ஊழலற்ற நிறைவான வளப்பங்கீடும் இருந்தால் இந்த பிரச்சினைகளை அர்ப்பணிப்பு மிக்க மாநகர சுகாதாரப்பிரிவின் ஊழியர் படையணியை கொண்டு முழுமையாக தீர்க்க தான் தயாராக இருப்பதாகவும்,  மாநகர வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் பிரச்சினைகளை தீர்க்க தன்னால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்