கல்லடி உப்போடை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்!!

(சுதா)
கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேன்நாடாம் மட்டுமாநகரில்
தேத்தாமர நிழலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஆகிபராசக்தி பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது எதிர்வரும் 31.07.2022 திகதி திருக்கதவு திறத்தல் மற்றும் திருக்கும்பம் வைத்தலுடன்  ஆரம்பமாகவுள்ளது.
திருக்கதவு திறக்கப்பட்டு, கும்பம் வைத்தலுடன்  ஆரம்பமாகவுள்ள முதல் நாள் சடங்கானது ஆலய பரிபாலன சபையினர் சார்பாக நடாத்தப்படவுள்ளதுடன், இரண்டாம் நாளான 01.08.2022 திங்கட்கிழமை பகல் சடங்கினை டாக்டர் பூபாலரெத்தினம் குடும்பமும் இரவுச் சடங்கினை ஊர்க்குடிமகன் மா.சுந்தரலிங்கம் அவர்களும் நடத்தவுள்ளனர். செவ்வாய்க்கிழமை 02.08.2022 திகதி “கண்ணகித் தாயாரிடம் செல்லல்” நிகழ்வினை 4ஆம் குறிச்சிப் பொதுமக்கள் நடாத்தவுள்ளனர்.
03.08.2022 புதன்கிழமை 5ஆம் குறிச்சிப் பொதுமக்கள் திருச்சடங்கை நடத்துவதுடன் தொடர்ந்து 04.08.2022 வியாழக்கிழமை 1ஆம் குறிச்சிப் பொதுமக்களும், 05.08.2022 வெள்ளிக்கிழமை பலிச்சடங்கினை 2ஆம் குறிச்சிப் பொதுமக்களும், 06.08.2022 சனிக்கிழமை 3ஆம் குறிச்சிப் பொதுமக்களும் நடத்தவுள்ளனர்.
07.08.2022 திகதி ஞாயிற்றுக்கிழமை மடிப்பிச்சை எடுத்தல், நெல் குற்றல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, 08.08.2022 திகதி திங்கட்கிழமை அதிகாலை வேளையில் விநாயகப்பானை பொங்கலிட்டு அதனைத்தொடர்ந்து நண்பகல் 12.00 மணியளவில் பள்ளையப்பானை பொங்கி,  அம்பாளுக்கு பள்ளையம் படைத்து கன்னிமாருக்கும் பரிகலங்களுக்கும் படையல் படைத்து பூசை வழிபாடுகள் இடம்பெற்று, தேவாதிகள் உள்ளிட்ட பூசகர்களினால் அடியார்களுக்கு மடிப்பிச்சை பிரசாதம் வழங்கியதனைத் தொடர்ந்து, அம்பாளின் திருக்கும்பங்கள் சொரிதலுடன் இவ்வாண்டிற்கான சடங்கு உற்சவம் இனிதே  நிறைவடையவுள்ளதுடன், எதிர்வரும் 10.08.2022 திகதி புதன்கிழமை வைரவர் பூசை இடம்பெறவுள்ளது.
ஆலய சடங்கு உற்சவங்கள் அனைத்தையும் ஆலய முதன்மை பூசகர் கு.கிருஷ்ணகுமார் தலைமையிலான பூசகர்கள் நடாத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.